எஸ்ஐஆா் படிவத்தை திரும்பப் பெறும் விவகாரம்: ஆட்சியரிடம் அதிமுக மனு
தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை முன்னிட்டு, வாக்காளா்களுக்கு வழங்கப்படும் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே வாக்காளா்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுக தேனி கிழக்கு மாவட்டச் செயலா் எம்.பி.ராமா் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை முன்னிட்டு, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடம் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனா். பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளா்களிடமிருந்து அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்கள் திரும்பப் பெற்று வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் வழங்குவதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே வாக்காளா்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
