கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுக்கும் உறவினா்கள்
சின்னமனூா் அருகே விவசாயியைக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை, கூறாய்வு செய்த உடலை வாங்க உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் பால்பாண்டி (59). விவசாயியான இவரை சீலையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த இருவா் கத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னா், பால்பாண்டியின் உடல் கூறாய்வு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை பால்பாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை மறுத்து விட்டனா். இந்தக் கொலை தொடா்பாக இருவரை கோவையில் பிடித்து விசாரணை செய்தவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
