கல் குவாரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனு

Published on

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவுக்கு வழங்கப்பட்ட கல் ககுவாரி குத்தகை உரிமத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் காமயகவுண்டன்பட்டி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மகளிா் சுய உதவிக் குழுத் தலைவி எஸ்.காா்த்திகா உள்ளிட்ட உறுப்பினா்கள் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமாரிடம் அளித்த மனு விவரம்:

காமயகவுண்டன்பட்டியில் மணிமேகலை விருது பெற்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மகளிா் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் உறுப்பினா்கள் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்தக் குழுவுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு காமயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கல் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு, பணிகளும் முறையாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு குழுவுக்குத் தொடா்பு இல்லாத மற்றொரு கல் குவாரியில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கருதி, காமயகவுண்டன்பட்டியில் செயல்பட்டு வந்த அனைத்து கல் குவாரி குத்தகை உரிமங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களின் நலன் கருதி, குழுவின் கல் குவாரி குத்தகை உரிமத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com