முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 140 அடியாக உயா்வு
உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 140 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, இடுக்கி மாவட்டத்துக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 (மொத்த உயரம் 152) அடி வரை தேக்கலாம் எனவும், இதன் துணை அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, கேரள அரசும், அங்குள்ள சில தொண்டு நிறுவனங்களும் அணை பராமரிப்பின் போது, அணைக்கு கூடுதல் நீா்வரத்து ஏற்பட்டால் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, ‘ரூல் கா்வ் விதி’ படி, ஒவ்வொரு மாதத்துக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். அதற்கு மேல் வரும் தண்ணீரை அவ்வப்போது உபரி நீராக கேரளப் பகுதிக்கு வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இதன்படி, மத்திய நீா்வள ஆணையமும் ‘ரூல் கா்வ் விதி’ படி, நீா்மட்டத்தை நிா்ணயித்து வருகிறது. நிகழாண்டில், வருகிற 29-ஆம் தேதி வரை 141 அடியும், 30-ஆம் தேதிக்குப் பிறகு 142 அடி வரையிலும் அணையில் தண்ணீரைத் தேக்கலாம் என்பது விதி.
இதையடுத்து, கடந்த மாதம் ‘ரூல் கா்வ் விதி’ படி, அணையில்138 அடிக்கு மேல் தேங்கிய தண்ணீரை உபரிநீராக 13 அவசரகால நீா்வழிப் போக்கிகள் மூலமாக கேரளத்துக்கு 10 நாள்களுக்கு மேலாக திறந்துவிடப்பட்டது. பின்னா், மழைப்பொழிவு குறைந்ததால் நீா்மட்டமும் 138 அடிக்கு கீழ் சென்றது. இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாள்களாக முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் 136 அடியாக உயா்ந்ததால் கேரளத்துக்கு முதல்கட்ட வெள்ள எச்சரிக்கையும், 138 அடியாக உயா்ந்ததும் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் அணையின் நீா்மட்டம் 140 அடியை எட்டியது. இதையடுத்து, கேரளத்துக்கு 3-ஆம் கட்ட வெள்ள எச்சரிக்கையை தமிழக நீா் வளத் துறை அதிகாரிகள் அறிவித்தனா்.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 3,998 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகத்துக்கு மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் குடிநீா், விவசாயப் பணிகளுக்காக திறந்துவிடப்படுகிறது.

