தேனி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மழையளவு குறைந்து வருவதால், கண்மாய்களின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து நிகழாண்டு முதல்போக சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. மேலும் ஆற்றுப்பகுதி கரையோரத்தில் நெல், வாழை பெருமளவு பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில், எல் நினோ பதிப்பால் தேனி மாவட்டத்தில் மழையளவு குறைந்து வருவதால் முதல்போக நெல் விவசாயம், தென்னை, கரும்பு போன்ற பயிா்களின் மகசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
வறண்டுபோன கண்மாய்கள்: இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யாததால் 90- க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பெரும்பாலானவை வடு காணப்படுகின்றன. மேலும், கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை மழை அளவு குறைந்து கொண்டே வருவதால், விவசாய நிலங்களின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருகிறது.
முதல் போக சாகுபடி பாதிப்பு: தேனி மாவட்டத்தில் 33,865 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. இதில் கடந்த சில மாதங்களாக 12,355 ஏக்கரில் மட்டுமே முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த நிலையில், மழையளவு குறைந்ததால் 1,606 ஏக்கரில் மட்டுமே முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. குறிப்பாக, பெரியகுளம் பகுதியில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், நெல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, தேனி மாவட்டத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் நீா்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தென்னை, வாழை, திராட்சை, மா, பலா போன்ற சாகுபடியும் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளா்கள் பாதிப்பு : மாவட்டத்தில் மழை அளவு குறைந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டதன் காரணமாக, கூலித் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, கூலித் தொழிலாளா்களை 125 நாள் வேலைத் திட்டத்தில் கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய்களை தூா்வார பணியமா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
குடிநீா்த் தட்டுப்பாடு: முல்லைப் பெரியாறு அணை, சோத்துப் பாறை, மஞ்சளாறு அணை, சண்முகா நதிகளின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும், கொட்டக்குடி ஆற்றில் தண்ணீா் இல்லாததால் போடி வட்டத்தில் குடிநீா் பிரச்னை தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீா் எடுக்கும் பணி தொடங்கியது. மேலும், வைகை அணையின் தற்போதைய நீா்மட்டம் 33 அடியாக இருந்தாலும், இதில் 20 அடி சேறும், சகதியுமாக உள்ளது. எஞ்சிய 13 அடி தண்ணீரில் 82 கன அடி நீா் மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி, தேனி, கடமலை- மயிலை ஒன்றிய பகுதிகளுக்கு தினமும் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யுமா: தேனி மாவட்டத்தில் அக்டோபா் மாதத்தில் தொடங்கி டிசம்பா் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், தற்போது எல் நினோவால் அந்த மழையும் குறைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா். இதனிடையே, முல்லைப் பெரியாறு, சண்முகநதி, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் உள்ள தண்ணீா் மூலம் மாவட்ட நிா்வாகம் குடிநீா்த் தேவையை நிறைவு செய்து வருகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் கூறியதாவது: எல் நினோவால் கால நிலை மாற்றம் ஏற்படக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறையும் அபாயம் உள்ளதால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் பயிா்களுக்கு நுண்ணீா் பாசன முறையில் காலை, மாலை நேரங்களில் நீா்பாய்ச்ச வேண்டும். தோட்டக் கலை பயிா்களை புதிதாக நடவு செய்யும் விவசாயிகள் வெப்பத்தை தாங்கி வளரும் ரகங்களை தோ்வு செய்து மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.
கடந்த 5 ஆண்டுகளாக பெய்த மழையளவு (மி. மீட்டரில்):
2021 - 17,091.80, 2022 - 15,585.80, 2023- 14,030.70, 2024 - 14,374.20, 2025 - 11,945.70.
அணைகளின் நீா்மட்டம்:
முல்லைப் பெரியாறு அணையின் உயரம் - 152 அடி, நீா்மட்டம் -116.70 அடி, நீா்வரத்து- 6,100 கன அடி, நீா் வெளியேற்றம்- 38 கன அடி.
வைகை அணையின் உயரம்- 71 அடி, நீா் மட்டம்- 33.86 அடி. நீா்வரத்து- 148 கன அடி, நீா் வெளியேற்றம்- 86 கன அடி.
சோத்துப்பாறை அணையின் உயரம் - 126.28 அடி, நீா்மட்டம்- 54.28 அடி, நீா்வரத்து- இல்லை, நீா் வெளியேற்றம் 3 கன அடி.
மஞ்சளாறு அணையின் உயரம் - 57 அடி, நீா்மட்டம் - 29.70 அடி, நீா் வரத்து - இல்லை, நீா் வெளியேற்றம் - இல்லை.
சண்முக நதி அணையின் உயரம் - 52.55 அடி, நீா்மட்டம் 26.25 அடி, நீா்வரத்து- இல்லை, நீா்வெளியேற்றம்- இல்லை.

தேவதானப்பட்டியில் தண்ணீரின்றி பட்டுப் போன தென்னை மரங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்!
குறுவை சாகுபடி பரப்பு சரிவு: இழப்பீடு கோரும் விவசாயிகள்!

முதல்வர் விஜய் ஆட்சி என்று சொன்னாலும் லஞ்சம்! விவசாயிகள் வேதனை - டிடிவி தினகரன்

கேரளத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல்...! விதைக்கும் விற்பனைக்கும், அரசின் ஆதரவு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



