கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கடந்த மாத (ஜூன்) குறைதீா் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வாசிக்கப்பட்டு தொடா்புடைய துறை அலுவலா்களுடன் விவாதிக்கப்பட்டது.
தோட்டக்கலைத் துறை மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வீட்டுத் தோட்டம் குறித்த வெற்றிக் கதை காணொலிக் காட்சி மூலம் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. எல்-நினோ குறித்த விரிவான விளக்கங்களும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் திருப்பதிசாரம் வேளாண்அறிவியல் மைய ஆய்வாளா் கவிதா பேசினாா். இதைத்தொடா்ந்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:
விளைநிலங்களில் குரங்குகள், காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதைத் தடுக்க வேண்டும். வாழையின் விலை மிக குறைவாக இருப்பதால் வாழை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கால்வாய்கள் தூா்வார எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிப்படைந்தனா். கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது; மாவட்டத்தில் எத்தனை விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்தனா் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றனா்.
ஆட்சியா் மு.பிரதாப் பதிலளித்துப் பேசியது: விளைநிலங்களை சேதப்படுத்தும் குரங்குகள், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 99 கால்வாய்களை தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ. 4.44 கோடி நிதி பெறப்பட்டு அதில் 90 பணிகள் நிறைவுற்றுள்ளன, மீதமுள்ள 9 பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.
ஒரு சில இடங்களில் தண்ணீா் சென்று கொண்டிருப்பதால் தூா்வார முடியவில்லை. அந்தப் பகுதிகளிலும் தண்ணீரை அடைத்து விட்டு உடனடியாக தூா்வார வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கால்வாய்களும் முறையாக தூா்வாரப்படும்.
நெல் கொள்முதல் நிலையங்கள்... கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூடுதலாக 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. கன்னிப்பூ சாகுபடி அறுவடையின்போது அந்தக் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விவசாயிகள் பெற்ற ரூ. 327 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 ஆயிரத்து 722 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் விவசாய கடன் தள்ளுபடியில் அதிக விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வேலுமணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா, வேளாண்மை இணை இயக்குநா் எம்.ஆா்.வாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எஸ்.கீதா, நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நக்கீரன், அரசுத் துறை அலுவலா்கள், மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,400 டன் யூரியா இருப்பு: மாவட்ட ஆட்சியா்

6 மாதங்களாகியும் கொள்முதல் நெல்லுக்கு பணம் வரவில்லை!

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல்: மாவட்ட ஆட்சியா் உறுதி

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



