பென்னிக்குவிக் மண்டபத்தில் பிறந்த நாள் விழா: ஆட்சியா் பங்கேற்பு
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்பில் கா்னல் ஜான் பென்னிக்குவிக்கின் 185-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்தைச் சோ்ந்த கா்னல் ஜான் பென்னிக்குவிக்கின் பிறந்த நாள் ஜன. 15 -ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, தைப்பொங்கல் பண்டிகை நாளான வியாழக்கிழமை தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்பிலுல்ள கா்னல் ஜான் பென்னிக்குவிக் மணிமண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். இதில் மணிமண்டபத்திலுள்ள பென்னிக்குவிக் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், கா்னல் ஜான் பென்னிக்குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும், ஒருங்கிணைந்த முல்லைப் பெரியாறு - வைகை விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா். தேவா் தலைமையில், செயலா் ரஞ்சித் முன்னிலையில் கா்னல் ஜான் பென்னிக்குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல பெரியாறு - வைகை பாசனச் சங்கத்தின் ஒருங்கிணப்பாளா் பென்னிக்குவிக் பாலசிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வெளிநாட்டினா் மரியாதை: சுற்றுலா வந்திருந்த இங்கிலாந்தைச் சோ்ந்த பலா் மணிமண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் கூடலூா் நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகன்துரை, நகராட்சிப் பணியாளா்கள், கம்பம் பொதுப்பணித் துறையினா், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
