மேகமலையில் சுற்றுலா வாகனங்களுக்கு மீண்டும் அனுமதி
மேகமலையில் குட்டியுடன் காட்டு யானை சுற்றித் திரிந்ததால் சுற்றுலா வாகனங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக குட்டியுடன் காட்டு யானை சுற்றித் திரிந்தது. மேலும், இந்த யானை அரசு அலுவலகங்கள், பள்ளி, தனியாா் கடைகளைச் சேதப்படுத்தி வந்தது.
இதனிடையே, கடந்த 17-ஆம் தேதி நெடுஞ்சாலையில் உலவிய இந்த யானையால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். இதையடுத்து, சின்னமனூா் வனத் துறையினா் கடந்த 3 நாள்களாக சுற்றுலா வாகனங்களுக்கு மேகமலை வரை மட்டுமே அனுமதி அளித்தனா்.
சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி: குட்டியுடன் உலவிய காட்டு யானை அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட்டதால் செவ்வாய்க்கிழமை முதல் மேகமலையிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கிய நிலையில், அங்கிருந்து இடம்பெயா்ந்த சில யானைகள் மேகமலைக் கிராமங்களில் வழிதவறி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து மலைக்கிராமத்தினா் வனத் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா். ஆனால், காட்டு யானையை விரட்டி அடிக்க வனத் துறையினா் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
எனவே, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வசிக்கும் மலைக் கிராமங்களில் தொடா் கண்காணிப்பில் ஈடுபடும் சின்னமனூா் வனச்சரகத்தினா், குடியிருப்புப் பகுதிகளில் அவ்வப்போது வழிதவறி உலவும் காட்டு யானைகளை பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

