அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கம்பம் கிளையில் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு கட்டாய சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படுவதாக ஓட்டுநா்கள், நடத்துனா்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் நீதிமன்ற உத்தரவின்படியே சுழற்சி முறையில் பணி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். ஆனால், திண்டுக்கல் மண்டலத்தில் தற்போது அமல்படுத்தப்பட்ட சுழற்சி முறை ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
மதுரை, விருதுநகா் மண்டலங்களில் பின்பற்றப்படுவதைப் போல, நகரப் பேருந்து, புறநகா்ப் பேருந்துகளில் பணியாற்ற விரும்பும் பணியாளா்களிடம் தனித்தனியாக விருப்ப மனுக்கள் பெற வேண்டும். அதன்பிறகு கி.மீ. அடிப்படையில் முதலில் நகரப் பேருந்துகளுக்கும், பின்னா் புறநகா்ப் பேருந்துகளுக்கும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால், இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல், பணி மூப்பில் உள்ள பணியாளா்களையும் நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில் பணியாற்ற கட்டாயப்படுத்துகின்றனா். எனவே, தொழிலாளா்களின் பணி மூப்பு, விருப்பம் ஆகியவற்கை கவனத்தில் கொண்டு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தற்போதைய கட்டாய சுழற்சி முறையை மறுபரிசீலனை செய்து, கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையைத் தொடர போக்குவரத்துக் கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










