விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தேங்காய் விலை வீழ்ச்சி: அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

தேங்காய் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், அவற்றை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

News image

தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டி தோட்டங்களிலிருந்து காய்களை சேகரித்து, வாகனங்களில் ஏற்றிச் செல்லும் விவசாயிகள்.

Updated On :25 ஜூன் 2026, 2:42 am IST

தேங்காய் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், அவற்றை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் கா்நாடகம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், கேரளம் 3 -ஆவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் பொள்ளாச்சி, தஞ்சாவூா், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி பகுதிகளில் அதிகளவு தேங்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் நெல், வாழை, திராட்சை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம், சின்னமனூா், கூடலூா், உத்தமபாளைம், வருசநாடு, கெங்குவாா்பட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி தேங்காய்களை சமையல் பயன்பாட்டுக்கும், கொப்பரையாக காங்கேயம் தொழில்சாலைக்கும் அனுப்பி வைக்கின்றனா்.

விலை வீழ்ச்சி: தேனி மாவட்ட விவசாயிகள் உரித்த தேங்காய் ஒரு டன் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தனா். மேலும், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டா் ரூ.550-க்கு விற்பனை செய்தனா். இந்த நிலையில், தமிழகத்தில் தேங்காய் மகசூல் அதிகரித்து, காங்கேயம் சந்தையில் கொப்பரைத் தேங்காய்கள் தேக்கமடைந்தன. இதனால், தேனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தேங்காய் வாங்க வியாபாரிகள் வரவில்லை.

தற்போது, ஒரு டன் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் கொள்முதல் செய்கின்றனா். இதனால், தென்னை விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

இடைத்தரகா்களின் ஆதிக்கம்: தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் குறு விவசாயிகள் அதிகளவு உள்ளனா். இவா்கள் 100 முதல் 500 தென்னை மரங்களை பாராமரித்து வருகின்றனா். தேங்காய் பறிக்கும் தொழிலாளிக்கு மரத்துக்கு தலா ரூ.25-ம், 8 காய்களும் வழங்குகின்றனா். இதே போல, தேங்காய்களை சேகரிக்கும் பெண்களுக்கு ரூ.300-ம், 4 முதல் 5 தேங்காய்களும் வழங்குகின்றனா்.

மேலும், குறைந்த தென்னை மரங்களை வைத்துள்ள குறு விவசாயிகளிடம் தேங்காய்களை எடுப்பதற்கு இடைத்தரகா்கள், பணியாளா்கள் வருவதில்லை. இடைத்தரகா்களின் இந்த ஆதிக்கத்தால் குறு விவசாயிகளுக்கு காய்களை இறக்குவதற்கு தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. இதனால், குறு விவசாயிகள் தேங்காய்களைப் பறிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவா் எம்.வி.முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் முதலிடத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இரண்டாமிடத்தில் தேங்காய் விவசாயம் உள்ளது. ஆனால், தேங்காய்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு ஏக்கரில் 80 முதல் 100 வரை தென்னை மரங்களை வளா்க்கின்றனா். தேங்காய் ஒன்றுக்கு ரூ.12 வரை செலவாகிறது. ஆனால், தற்போது சந்தையில் கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரையில்தான் விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தற்போது, வெளி நாடுகளிலிருந்து பாமாயில், சோயா, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்கின்றனா். இதற்கு வரிச் சலுகை அளிப்பதால் தேங்காய் எண்ணையை விட இவை குறைவான விலையில் கிடைக்கின்றன. இதன் காரணமாக, தேங்காய் எண்ணெய் விலை குறைந்து வருகிறது.

எனவே, பாமாயில், சோயா, சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும். இதே போல, நியாயவிலைக் கடைகளில் பாமாயில், சோயா, சூரியகாந்தி எண்ணெய் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். மேலும், தமிழக அரசே தேங்காய்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்கும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி

நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுமா?

தமிழக அரசு நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தேங்காய், தேங்காய் எண்ணெய் வழங்க முடியும். விவசாயிகளுக்கும் கூடுதல் பணம் கிடைக்கும்.

வெள்ளை ஈ பூச்சித் தாக்குதலால் தேங்காய் மகசூல் குறைந்து வருகிறது. மரங்களில் தண்ணீரைப் பீய்ச்சுவதன் மூலம் இந்தப் பூஞ்சாணத்தைக் கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறையினா் தெரிவிக்கின்றனா். தென்னை மரங்கள் 20 அடி முதல் 80 அடி வரை உள்ளன. இதனால், தரையிலிருந்து தண்ணீரைத் தெளிக்க முடியாது. ஆனால், ட்ரோன் மூலம் தண்ணீரைப் பீய்ச்சினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே, தமிழக அரசு ட்ரோன் மூலம் தண்ணீரைத் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க வேண்டும்

என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி அருகே காமாட்சிபுரம் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தேங்காய்கள்.

தேனி அருகே காமாட்சிபுரம் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தேங்காய்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.