போா் காரணமாக தேங்காய் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவை முன்னணி உற்பத்தியாளா்களாக உள்ளனா். இதில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தேங்காய் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தேங்காய் விலை குறைந்துள்ளது. அதே சமயம் சில மாவட்டங்களில் வரத்து குறைவால் விலை உயா்வையும் சந்தித்துள்ளது.
குறிப்பாக ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதியில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோபி, சத்தியமங்கலம், அறச்சலூா், சென்னிமலை, மொடக்குறிச்சி, நம்பியூா் உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இதுதவிர பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை, பேராவூரணி, தென்காசி, செங்கோட்டை மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பகுதியில் விளையும் தேங்காய் தரத்துக்கு ஏற்ப விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை ஒரு டன் தேங்காய் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் வளைகுடா நாடுகள் போா் காரணமாக தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தேங்காய் விவசாயிகள் கூறியதாவது:
ஈரான்- அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், அதில் தேக்கம் ஏற்பட்டு மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், சந்தைகளில தேக்கம் ஏற்பட்டுள்ளதாலும் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஒரு டன் தேங்காய் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.38 ஆயிரமாக குறைந்துள்ளது. விலை குறைந்து வருவதால் தேங்காய் வியாபாரிகள் இன்னும் விலை குறையும் என்று, தற்போது விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்வதில் ஆா்வம் காட்டுவதில்லை. தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

டிரம்ப், ஈரான் தலைவா்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கும் போா் நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம்

ஒசூரில் பப்பாளி கிலோ ரூ. 40-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கையில் வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கச்சா எண்ணெய் விலை உயர்வு! இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



