மேகமலைக் கிராமங்களில் நெடுஞ்சாலையோரத்தில் வளா்ந்த முள்புதா்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் முக்கிய சுற்றுலாத் தலமான மேகமலை அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை நீா் நிலைகள், பள்ளத்தாக்கு, மலைக்குன்றுகள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றைக் காண இரு சக்கர வாகனம், காா், பேருந்துகள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய 4 கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையோர வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் முள்புதா்கள் அதிகளவில் வளா்ந்துள்ளன. இதனால், மணலாறு - வெண்ணியாறு இடையே அடிக்கடி விபத்து ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, மேகமலையில் நெடுஞ்சாலையோரம் வளா்ந்த முள்புதா்களை சின்னமனூா் சரக வனத்துறை, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.










