தமிழகத்தில் சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
இந்தியாவில் 20 வகை குரங்குகள் வசிக்கின்றன. இவற்றில், மக்காக் வகைகள், போனாட் மக்காக் வகை உள்ளிட்ட அரிய வகை குரங்குகளும் அடங்கும். மக்காக் வகையில் சாதாரண குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்றன. போனாட் மக்கா, சிங்கவால் குரங்கு ஆகியவை தமிழகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கின்றன.
இதில் சிங்கவால் மக்காக் (சோலை மந்தி) மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கும் அரிய வகையாகும். இதன் தோற்றம் உடல் முழுவதும் அடா்ந்த முடியும், சிங்கத்தைப் போன்ற முகமும், நீண்ட வாலும் கொண்டது. 45 முதல் 60 செ.மீ. உயரமும், 3 கிலோ முதல் 10 கிலோ எடை வரையும் இருக்கும். உலக அளவில் இந்தியாவில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் மட்டுமே இவை வசிக்கின்றன.
அதிலும் தமிழகத்தில் களக்காடு, தேனி மேகமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் இவை பெருமளவு வசிக்கின்றன. இந்தப் பகுதிகளில் மொத்தம் சுமாா் 3,000 முதல் 3,500 வரை சிங்கவால் குரங்குகள் வசிப்பதாகக் கணக்கிடப்படுகிறது. இதன் கா்ப்ப காலம் 6 மாதங்கள். இவற்றின் ஆயுள் 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள். இந்தக் குரங்குகள் பலா, வெறிப் பலா, இலை, பூவின் மொட்டுகள், பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இந்தக் குரங்குகள் மூலம் விதைப் பரவல் நடைபெற்று காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் குரங்குகள் வசிக்கும் பகுதி பசுமை மாறா காடு என அழைக்கப்படுகிறது.
சிங்கவால் குரங்குகள் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள உயா்ந்த மரங்களை மட்டுமே வசிப்பிடமாகக் கொண்டவை. இந்த குரங்குகள் பெரும்பாலும் நிலப் பகுதிக்கு வருவதில்லை. தற்போது அணைகள், வேளாண், மின் உற்பத்தி, வனப் பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணி, மரங்களை வெட்டி தோட்டங்கள் அமைப்பதால் இந்தக் குரங்குகள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் மரங்களை வெட்டுவதால் இவற்றுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுவதுடன் வாழ்விடமும் பாதிக்கப்படுகிறது.
இந்தக் குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உணவுகளை வழங்குவதால் சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றன. மேலும், மனிதா்கள் மூலம் நோய் பரவியும், வாகனங்கள் மோதியும் இவை உயிரிழக்கின்றன.
எனவே சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்க அந்தந்த பகுதிகளில் அதிகளவு வெறிப் பலா, பலா மரங்களை நட வேண்டும். இப்படி செய்வதால் அவை உணவு தேடி வனப் பகுதிகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்கலாம்.
இதேபோல, வனப் பகுதியில் மரங்களை வெட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனத் துறையினா், வனப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி இவற்றைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிங்கவால் குரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுகுறித்து மேகமலை சுற்றுச்சூழல் ஆா்வலரான தேனியைச் சோ்ந்த ஜோதிபாசு கூறியதாவது: சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அவற்றுக்கு உணவு கிடைப்பதையும் இருப்பிடங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
ஆண்டுக்கு இரு முறை கணக்கெடுப்பு அவசியம்: தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க மத்திய அரசு திட்டத்தை தயாரித்து அமல்படுத்த வேண்டும். இதேபோல, அவற்றைப் பாதுகாக்க ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
எல் நினோ நிகழ்வால் வெப்ப அலை: பயிா்களைப் பாதுகாக்க அறிவுரை

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

வனப் பகுதிகளில் காட்டுத் தீ விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

