திருக்காளாத்தீஸ்வரா் கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தல்

பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா
தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்க வேண்டும் என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா வலியுறுத்தினாா்.
உத்தமபாளையத்தில் பாண்டிய மன்னா்கள் கால திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தென் காளகஸ்தி என்று பக்தா்களால் போற்றப்படும் முக்கிய சிவாலயமாகும். இங்கு ராகு-கேது பரிகார சந்நிதியும் உள்ளது.பழைமையான இந்தக் கோயில் ஆண்டுதோறும் மாசித் திருவிழாவில் தேரோட்டமும் நடைபெறும்.
இந்த நிலையில், கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கா் நிலங்கள், கடைகளை மீட்டெடுக்க வேண்டும். கோயில் முன்பாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து திருக்காளாத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுப முகூா்த்த நாளில் ஏராளமான திருமணம்கள் நடைபெறும் முக்கிய திருத்தலமாகும். இந்நிலையில், பல ஆண்டுகளாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் திருவிழா நடத்த முடியாமல் உள்ளது.
இதனால், சிதிலமடைந்த தெப்பக்குளத்தை சீரமைப்பதோடு, குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். மேலும், கோயிலுக்கு சொந்தமான நெல் பயிா், தென்னை மரங்கள், கடைகள் ஆகியவை பல ஆண்டுகளாக தொடா்ந்து ஒரு சிலா் அனுபவ பாத்தியத்தில் இருப்பதோடு, ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
எனவே, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பு தெப்பக்குளத்தை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் மீட்டெடுக்க வேண்டும். சட்டவிதிமுறைக்கு உள்பட்டு கோயிலுக்கு சொந்தமான கடைகளை ஆண்டுதோறும் முறையாக ஏலமிட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

