
கல்லில் வடித்த கவிதை
கோயில்களில் கற்சிலைகளின் அழகையும் வேலைப்பாடுகளையும் ரசித்தவர்களுக்கு மனதில் தோன்றும் கேள்விகள், 'இதை எப்படிச் செய்திருப்பார்கள்?

ஆர்.எஸ்.
கோயில்களில் கற்சிலைகளின் அழகையும் வேலைப்பாடுகளையும் ரசித்தவர்களுக்கு மனதில் தோன்றும் கேள்விகள், 'இதை எப்படிச் செய்திருப்பார்கள்? இதற்கான பயிற்சி எப்படிக் கிடைத்திருக்கும்?' என்பதாகத்தான் இருக்கும்.
அண்மையில் சென்னை லலித் கலா அகாதெமியில் சிற்பி டி. பாஸ்கரன் மற்றும் ஓவியர் ஜே. கோபால் இருவரும் இணைந்து 'மெளனத்தின் உரையாடல் - கற்சிலை பேசும் - ஓவியங்கள் பதில் சொல்லும்' என்ற கண்காட்சியை நடத்தினர்.
இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த தட்சிணாமூர்த்தி சிலை, பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. உள்ளம் கவர் 'கல்'வனாக தட்சிணாமூர்த்தி இருந்தார். மிகவும் நுட்பமாக வடிக்கப்பட்ட இந்தச் சிலையை வடித்த சிற்பி டி. பாஸ்கரன், தனது சிலை முன் சிலையாக நின்றுவிட்ட பார்வையாளர்களுக்கு விளக்கும்போது, மெல்லிய புன்னகையுடன், 'இந்தச் சிலையை முழுமையாகச் செய்து முடிக்க 300 நாள்கள் ஆனது' என்கிறார்.
இந்தக் கண்காட்சியில் அவர் வடித்த விநாயகர் சிலை மற்றும் பெருமாள் சிலை உத்தரத்தில் பொருத்துவதற்கான வடிக்கப்பட்ட கற்பூக்கள் உள்பட வேலைப்பாடுகள் நிறைந்த கற்சிலைகளை வைத்திருப்பதோடு, தான் பயன்படுத்தும் கருவிகளையும் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தியிருந்தார்.
மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றியவர். பின்னர் விக்டோரியாஸ் வே திட்டத்துக்காக அயர்லாந்து சென்று, மேற்கத்திய நாடுகளில் இந்த மரபுடன் கற்சிலைகளை வடித்திருப்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிலைகளையும், அவர்களது கலை வேலைப்பாடுகளையும் நன்கு அறிந்தவர். 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த சிற்பிக்கான தேசிய விருது, குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. அவருடன் நடந்த உரையாடல்:
சிற்பியாக வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஏற்பட்டது?
ஒரு சிற்பிக்கு அடிப்படையானது ஓவியம் வரைதல். சிலை செதுக்கத் தொடங்கும் முன்பாக ஓவியமாக வரைந்து, அதை முப்பரிமாணத்தில் சிந்தித்து, பிறகுதான் வேலையைத் தொடங்குவேன். சிலை வடிப்பதற்கு முன்பாகவே என் மனதில் ஒரு சிலை உருவம் பெற்றிருக்கும். அது மனக்கண் முன்பாக இருக்கும்.
எனக்குச் சொந்த ஊர் தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை. நான் சிறுவனாக இருந்தபோது ஓவியம் நன்றாக வரைந்தேன். இங்கே சிற்பக் கல்லூரி இருப்பதை அறிந்து இங்கு வந்து சேர்த்தார்கள். 8 ஆண்டுகள் படிப்பு. பின்னர் இதே கல்லூரியில் பணியாற்றினேன். அயர்லாந்தில் விக்டோரியா வே திட்டத்தில் பணியாற்றச் சென்றேன். ஆனாலும் என் மனதில் எனக்கான படைப்பு என் பெயர் சொல்லும்படியான படைப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, எனக்குப் பிடித்த சிலைகளை வடித்துக்கொண்டிருக்கிறேன்.
சில கோயில்களில் கற்சங்கிலிகள் உள்ளன. இப்போதும் அதுபோலச் செய்ய முடியுமா?
முடியும். ஹைதராபாத்தில் ஒரு பெரும் செல்வந்தர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு விநாயகர் கோயில் அமைத்துக் கொடுத்தேன். அதில் கற்சங்கிலிகள் செய்திருக்கிறேன். (அந்தக் கோயில் படத்தைச் சுட்டிக் காட்டுகிறார்). நம் முன்னோர் வடித்த எல்லாவற்றையும் நாமும் செய்ய முடியும். திறமை, பொறுமை இருக்க வேண்டும்.
இப்போதைய நவீனக் கருவிகள் சிற்பக்கலையின் கடின வேலையை குறைக்கிறதா?
நவீனக் கருவிகள் ஒரு கலைஞனுக்கு உதவியாக இருக்கிறது. அதில் சந்தேகம் இல்லை . நானும் நவீனக் கருவிகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால், உத்வேகம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்துதான் வந்தாக வேண்டும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிலையை எடுத்துக் கொண்டால், இது என் கற்பனையின் ஆக்கம். இந்த தட்சிணாமூர்த்தியின் வடிவம், இந்த மரம் எல்லாவற்றையும் என் மனம் திட்டமிடுகிறது. வழக்கமாக
தட்சிணாமூர்த்தியின் காலடியில் அமர்ந்திருக்கும் நான்கு முனிவர்களும் ஒன்றாக இருப்பார்கள். நான் அவர்களை தனித்தனியாக அமரச் செய்துள்ளேன். நுட்பமாக இதைச் செய்துமுடிக்க 300 நாள்கள் தேவைப்பட்டது. இந்தக் கலையில் கிடைக்கும் மனநிறைவு விலைமதிக்கவியலாதது. நான் கல்லூரியில் வேலை பார்த்திருந்தால் ஓய்வு பெற்று, ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், நான் எல்லாரையும் போல ஓர் ஆளாகத்தான் இருந்திருப்பேன். எனக்கான ஒரு படைப்பு, மனநிறைவு இருக்காது.
நீங்கள் அயர்லாந்தில் இருந்தபோது, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள சிலைகளைப் பார்த்து வியந்ததுண்டா?
ஆமாம். பலமுறை பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஐரோப்பிய சிலைகள் மிகத் தத்ரூபமானவை. போர்ட்ரைட் என்று சொல்வோம். மிக மிக அழகானவை. அது அவர்களது கலைத்திறன். இந்திய சிற்பக்கலை மரபு சார்ந்தது. தெய்வீகம் கலந்தது. மாடர்ன் ஆர்ட் பாணியில் கற்சிலைகள் அமைக்கவும் எங்களால் முடியும். நான் இந்திய மரபு சார்ந்த சிறபக் கலையைப் பின்பற்றுகிறேன்.
படங்கள் : சு. ஆனந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



