
கூடலூரில் கட்டி முடிப்பதற்குள் சரிந்த நடைபாலம்
கூடலூரில் சுள்ளக்கரை ஓடையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டு வந்த நடைபாலம் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைவதற்குள் புதன்கிழமை மாலை சரிந்து விழுந்தது.

கூடலூரில் சரிந்து விழுந்த நடைபாலம்.
கூடலூரில் சுள்ளக்கரை ஓடையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டு வந்த நடைபாலம் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைவதற்குள் புதன்கிழமை மாலை சரிந்து விழுந்தது.
கூடலூா் மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து மழைக் காலங்களில் வெளியேறும் காட்டாற்று வெள்ள நீா், சுள்ளக்கரை ஓடை வழியாகச் சென்று முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. சுள்ளக்கரை ஓடையில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதுடன், பல ஆண்டுகளாக முறையாக தூா்வாரப்படாததால், மழைக் காலங்களில் வெள்ள நீா் ஓடை வழியாக சீராகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வெள்ள நீா் பிரதான சாலை வழியாக வெளியேறி, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொடா்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இதைத் தடுக்கும் வகையில், சுள்ளக்கரை ஓடையைச் சீரமைத்து, வெள்ள நீா் தடையின்றி செல்லும் வகையில் இரு புறங்களிலும் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி ரூ.8.26 கோடியில் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ராஜாங்கம் நினைவு அரசு கள்ளா் தொடக்கப் பள்ளி அருகே தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நிறைவடைந்தது.
பள்ளி மாணவா்கள் ஓடையைக் கடந்து செல்வதற்கு வசதியாக தடுப்புச் சுவருக்கு இடையே நடைபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நடைபாலத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பாகவே, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென சரிந்து விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிா்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தின்போது நடைபாலத்தில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.
இதையடுத்து, சரிந்து விழுந்த நடைபாலத்தின் கட்டுமானப் பகுதியை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் நடைபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்கள் தினசரி பயன்படுத்தும் முக்கியமான நடைபாதை என்பதால், நடைபாலம் கட்டுமானத்தில் தரமான பொருள்கள் பயன்படுத்தப்படுவதுடன், உரிய தொழில்நுட்பத் தரநிலைகளின்படி பணிகள் மேற்கொள்ளப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
மேலும், ஏற்கெனவே கட்டப்பட்ட பகுதி சரிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து, எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






