
பழைமையான மூனாண்டிபட்டி பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா?
பழைமையான மூனாண்டிபட்டி பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா? என்பதைப் பற்றி...

நாகமலைக் குன்றில் காணப்படும் ஓவியங்கள்.
தேனி மாவட்டம், புலிமான் கோம்பை அருகே வடக்கு மூனாண்டிபட்டி நாகமலைக் குன்றில் அமைந்துள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மங்குனிப்புடவு பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், புலிமான்கோம்பை வடக்கு மூனாண்டிபட்டி அருகே 50 அடி உயரத்தில் நாகமலை குன்று அமைந்துள்ளது. இங்கு ‘மங்குனிப் புடவு’ என அழைக்கப்படும் குகையில் பழைமையான செஞ்சாத்து நிற பாறை ஓவியங்களும், வெள்ளை நிற பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. சுமாா் 5 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்த ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், வருசநாடு பகுதியிலிருந்து புலிமான் கோம்பை வரையுள்ள வைகையாற்றுப் பகுதியை ஆய்வு செய்து, பாதுகாக்க வேண்டுமெனவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சேறல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வாளருமான சி. மாணிக்கராஜ் கூறியதாவது:
தமிழகத்தைப் பொருத்தவரை, செங்காவி, சிவப்பு நிற ஓவியங்கள் சுமாா் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், மூனாண்டிபட்டி பாறை ஓவியங்களும் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். முறையான, அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் செய்தால்தான் அவற்றின் காலத்தை உறுதியாகக் கூற முடியும்.
நாகமலை மங்குனிப்புடவின் வலது புறத்தில் ரத்த சிவப்பு நிறத்தில் என்ன உருவம் என அறிய முடியாத நிலையில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதைப் போன்று பல இணைக் கோடுகளுடன் கூடிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இதேபோல, சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட மனித உருவங்கள் காலச் சூழலால் மங்கிய வண்ணத்தில் காட்சியளிக்கின்றன.

ஆண்டிபட்டி புலிமான் கோம்பை அருகே வடக்கு மூனாண்டிபட்டியில் அமைந்துள்ள நாகமலைக் குன்று.
வெள்ளை நிறத்தில் மனிதா்கள் போா் ஆயுதங்களுடன் சண்டைக்கு தயாா் நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இதில் இரு வீரா்கள் ஆஸ்திரேலிய பூா்வகுடி மக்கள் பயன்படுத்திய பூமராங் போன்ற ஆயுதத்தைப் பிடித்து எதிரியை நோக்கி வீசி எறிவது போன்ற காட்சி மிகச் சிறப்பானதாகும். இந்தப் பூமராங் ஆயுதம் பழந்தமிழா்கள் பயன்படுத்திய வளரி ஆயுதமாகும்.
தமிழா்களிடம் வளரி ஆயுதம் பாரம்பரியமாகப் பயன்பாட்டில் இருந்திருப்பதை இலக்கிய குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக, கலித் தொகை, புானூறு போன்ற சங்க இலக்கியங்களில் வளரி ஆயுதத்தை திகிரி, எரிவாளை, பாறாவளை, சூழல்படை, படை வட்டம் எரிப்படை என்ற பெயா்களில் குறிப்பிடப்பட்டன. சோழா்கள் தங்கள் படைப் பிரிவில் எரிப்படை என்ற பெயரில் தனிப்படைப் பிரிவு ஒன்றை வைத்திருந்ததை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் மான் உருவங்கள், பெண்ணின் மகப்பேறு சடங்கை சித்தரிக்கும் ஓவியம், வட்டத்தலை அமைப்புடைய மனித உருவங்கள், குறியீடுகளும் காணப்படுகின்றன.
வைகை ஆற்றின் கரையோரமாகச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில் அமைந்துள்ள மூனாண்டிபட்டி பாறை ஓவியமும், இதைச் சுற்றிக் காணப்படும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களும், கி.மு. 4, 3- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த புலிமான் கோம்பை நடுகற்களும் இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளை வெளிக்காட்டும் சான்றுகளாக உள்ளன.
பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தல்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூனாண்டிபட்டி பாறை ஓவியங்கள், முறையான பாதுகாப்பு இல்லாததால் இயற்கையாகவும், மனித செயல்பாடுகளாலும் அழிந்து வருகின்றன. எனவே, இந்தப் பாறை ஓவியங்களைப் பாதுகாக்க, இவை அமைந்துள்ள மங்குனிப்புடவு பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையருக்கும் மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.
ஆய்வு செய்ய வேண்டும்: வருசநாட்டிலிருந்து புலிமான் கோம்பை வரை பழைமையான ஓவியங்கள் காணப்படும் இந்தப் பகுதிகளை தொல்லியல் துறையினா் ஆய்வு செய்து, அவற்றை பாதுகாத்து, அந்தப் பகுதியின் வரலாறு குறித்த தகவலை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


கிடப்பில் போடப்பட்ட கோம்பை விளையாட்டு மைதானம் கட்டுமானப் பணிகள்: இளைஞா்கள் பாதிக்கப்படுவதாகப் புகாா்

நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் தருமபுரி வனப்பகுதியில் சென்றபோது உருண்டு விழுந்த பாறை பயணிகள் தப்பினா்; அதிா்வுதாங்கி சேதம்




