
ஊதியம் நிறுத்தம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்கள் அவதி
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும்
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், சிறப்பாசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில், அனைத்துவகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித்திட்டம் 2009-10 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. பின்னர் இது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதில் தமிழகத்தில் 13,115 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 202 சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் தமிழக அரசு நியமித்தது.
இவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவிகிதமும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவிகிதமும் இருந்து வந்தது. நிர்வாக வசதிக்காக அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் ஆசிரியர் கல்விப் பயிற்சி மையம் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்பட்டு, "சமக்ரா சிக்ஷா அபியான்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படுகிற மாநில அரசின் 40 சதவீகித ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் ரூ 34,148 என ஊதியம் பெற்றவர்கள் ஊதியம், தற்போது ரூ. 25 ஆயிரமாகிவிட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். மேலும் இவர்களுக்கு தொகுப்பூதியம் என்பதால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து புதன்கிழமை தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலச் செயலாளர் சரவணன் கூறியதாவது: கடந்த ஆறு மாதங்களாக மாநில அரசின் பங்களிப்பு ஊதியம் முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர 2012-13 ஆண்டு முழுவதும் ஊதியம் வழங்கப்படவில்லை. 2013-14 ஆம் ஆண்டிற்கான ஊதியத்தில் பத்து மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து கல்வித் துறைச் செயலாளர், இயக்குநர், அமைச்சர், மற்றும் முதல்வர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பலர் வேலையை விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
இதனால் அரசு புதிதாக 59 சிறப்பாசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 41 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களை நிரந்தரப் பணியாளர்கள் என அரசு கூறியுள்ளது. ஆனால் ஏற்கெனவே பணியில் உள்ள தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கவும், ஊதியம் குறைப்பில்லாமல் ஊதியம் வழங்கவும், பணி வரன்முறை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






