பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை மனு
By DIN | Published On : 21st November 2018 06:53 AM | Last Updated : 21st November 2018 06:53 AM | அ+அ அ- |

பட்டாசுத்தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை மனுவினை தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்னண், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை பட்டாசு வணிகர்கள் சங்கத்தினர் சென்னையில் திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் வி.ராஜாசந்திரசேகரன் தலைமையில் பொதுச்செயலாளர் என்.இளங்கோவன், சென்னை பட்டாசு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பிரபாகரன், ஜானி ஆகியோர் உடன் சென்று மனுக்களை வழங்கியுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பது: இனி வரும் காலங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரியம் உப்பின் மூலம் பட்டாசு தயாரிக்கக் கூடாது எனவும் சரவெடி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன. மேலும் பட்டாசு வெடிக்க இரண்டுமணி நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிகளின் படி ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டும் இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணிவரை வெடிக்ககூடாது என விதிமுறை உள்ளது. இது குறித்து மக்களவையில் சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டம் அமைக்க அரசியல் சாசனத்தில் நீதி மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
பசுமை பட்டாசு என இதுவரை மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் எதையும் அடையாளம் காட்டவிலை. வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் விதிகளின் படியே பட்டாசு தயாரிக்கப்படுகிறது.
சரவெடிகளை பொருத்தவரையில் பத்து வெடி இணைத்தால் எந்த அளவு ஒலி இருக்க வேண்டும்.100 வெடி ,1,000 வெடி, 10,000 வெடி இணைத்தால் ஒலி அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என 1999 ஆம் ஆண்டு மக்களவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றம் பேரியம் உப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் , குழந்தைகள் விரும்பும், பென்சில், சாட்டை, சக்கரம் உள்ளிட்ட வைகளை தயார் செய்ய இயலாது.
எனவே தீபாவளி பண்டிக்கைக்கு மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை தொடந்து திறந்து பணியை தொடங்க இயலாத நிலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள்ஆலைகளை திறக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பட்டாசுத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உதவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.