கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கற்போம் எழுதுவோம் இயக்கம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத்தறிவு இல்லாதோருக்கான “கற்போம் எழுதுவோம் இயக்கம்” குறித்த ஆசிரியர்களுக்குக்கானப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் உரையாற்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி
Updated On :29 அக்டோபர் 2020, 11:17 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத்தறிவு இல்லாதோருக்கான “கற்போம் எழுதுவோம் இயக்கம்” குறித்த ஆசிரியர்களுக்குக்கானப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர்,“ பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், தமிழ்நாட்டில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் "கற்போம் எழுதுவோம் இயக்கம்" என்ற புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் 60:40 என்ற நிதி பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.” என்றார்.

மேலும், “ 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1.24 கோடி பேர் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என தெரியவந்துள்ளது. மாவட்டங்களில் உள்ள கல்லாதோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே மாவட்டங்களில் கல்வியில் ஒட்டு மொத்த வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத 3.10 லட்சம் பேருக்கு இப்பயிற்சி நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை தன்னார்வலர்களைக் கொண்டு வழங்கப்படவுள்ளது.

இதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கற்போர் கல்வியறிவு மையமாகச் செயல்படும்.  தலைமை ஆசிரியர்கள் கிராமத்தில் தன்னார்வலரைக் கண்டறித்து இப்பணிக்கு நியமிக்க வேண்டும். இவர்கள் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கி, தேர்ச்சி பெற வைக்க வேண்டும். இப்பணியில் ஈடுபடும்  தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிப்பார்.

இப்பயிற்சி மே மாதம் முதல் ஆகஸ்டு வரை, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை என 3 கட்டமாக நடைபெறும்.

தேர்வு செய்யப்பட்ட கற்போருக்கு தினமும் 2 மணி நேரம் அதாவது மொத்தத்தில் 120 மணி நேரம் கற்றல் மற்றும் கற்பித்தல் பணி நடைபெறும்.” என்றார்.

திட்டம் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி விளக்கவுரையாற்றினார்.

பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.