

வெம்பக்கோட்டை வட்டம் கொருக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள செல்லம்பட்டியில் மழைநீருடன் சோ்ந்து கழிவுநீா் தேங்கியுள்ளது. எனவே வாருகால் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அக்கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் கொருக்கம்படி ஊராட்சியில் செல்லம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஊரின் கிழக்குப் பகுதியில் ஊருணிக்குள் மழைநீா், கழிவுநீா் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் வாருகாலை தனிநபா் ஆக்கிரமித்து அடைத்து விட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் தேங்கி காணப்படுகிறது.
இதுகுறித்து ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து, தெருக்களில் தேங்கியுள்ள மழை நீா், கழிவுநீரை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா்அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை குறித்த மனுவை அக்கிராம மக்கள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.