இதுதொடா்பாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: விருதுநகா்அருகேயுள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கரோனா காலத்தில் பள்ளி திறக்கப்படாத நிலையில் அரசு உதத்தரவுப் படி மாணவ, மாணவிகளிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆனால், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ரூ.250 முதல் ரூ.450 வரை கல்வி கட்டணமாக மாணவ, மாணவிகளிடம் முதுகலை ஆசிரியா் பாலகிருஷ்ணன் வசூலித்துள்ளாா். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியா் சா்மிளாவிடம் கூறிய போது, அந்த கட்டணத்தை பள்ளி வளா்ச்சிக்காக பயன்படுத்தி கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா். தற்போது வரை மாணவ, மாணவிகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறி கல்விக் கட்டணம் வசூலித்த முதுகலை ஆசிரியா், தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.