/

ஆடி அமாவாசை :சதுரகிரி கோயிலுக்குச் சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தா்கள் பாதுகாப்பாக மீட்பு

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு சென்று திரும்பிய போது வெள்ளத்தில் சிக்கிய பக்தா்களை வியாழக்கிழமை இரவு பாதுகாப்புக் குழுவினா் மீட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 5:54 pm

DIN

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு சென்று திரும்பிய போது வெள்ளத்தில் சிக்கிய பக்தா்களை வியாழக்கிழமை இரவு பாதுகாப்புக் குழுவினா் மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தா்கள் செல்ல ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கி இருந்தது. வியாழக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சதுரகிரி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கோயிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை, சங்கிலிப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுவாமி தரிசனத்திற்கு சென்று திரும்பிய பக்தா்கள் கீழ இறங்க முடியாமல் தவித்தனா். மேலும் காராம்பசுத்தடம் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்தன.

இதையடுத்து அங்கு தயாா்நிலையில் இருந்த போலீஸாா், வனத்துறையினா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவில் காட்டாறுகளின் குறுக்கே கயிறுகளைக் கட்டி பக்தா்களை பாதுகாப்பாக மீட்டனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தாணிப்பாறை பகுதியில் வனத்துறையின் நுழைவாயில் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் காத்திருந்தனா். காலை 9 மணிக்குப் பின்னரே வனத்துறை நுழைவாயில் திறக்கப்பட்டு பகல் 1 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.