நீரோடையில் குப்பை கொட்டியவா்களுக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் நீா்வரத்து ஓடையில் குப்பைகளைக் கொட்டியவா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், மாநகா் நல அலுவலா் மா.சரோஜா தலைமையில் சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா், சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்தக் குழுவினா் மாநகராட்சி 48-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காந்தி சாலை, சிவகாசி-விஸ்வநத்தம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள நீா்வரத்து ஓடையில் உணவுக் கழிவுகள், பழக் கழிவுகள், நெகிழிப் பைகள் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, ஓடைக்கு அருகில் இருந்த தனியாா் உணவகம், பழக்கடையிலிருந்து கழிவுகளை ஓடையில் கொட்டியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனியாா் உணவகத்துக்கு ரூ.5,000, பழக்கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:
பொதுமக்கள், வணிகா்கள் தினசரி உருவாகும் கழிவுகளை வீடுதேடி வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், வாகனங்களில் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். மாறாக, பொது இடங்களிலோ, தெரு முனைகளிலோ, நீா்வரத்து ஓடைகள், கழிவு நீா் வாய்கால்களிலோ குப்பைகளை கொட்டக்கூடாது.
மீறினால் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.