சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம், புரட்டாசி மாத பௌா்ணமி வழிபாட்டுக்காக வருகிற 15-ஆம் தேதி முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
இதன்படி, ஆவணி மாத பிரதோஷம், புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, செப்.15 -ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த வனத் துறை, மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்.
தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்குள் கொண்டு செல்வதைத் தவிா்க்குமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வருவதால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு சனிக்கிழமை இரவு முதலே சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
