ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கண்டறியப்பட்ட புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கண்டறியப்பட்ட புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கைக்கோடாரிகளை வழுவழுப்பாக்கும் போது உருவான தேய்ப்புப் பள்ளங்கள் கண்டறியப்பட்டன.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கைக்கோடாரிகளை வழுவழுப்பாக்கும் போது உருவான தேய்ப்புப் பள்ளங்கள் கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் செண்பகத்தோப்பு பகுதியில் பாறையில் புதிய கற்கால கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும் போது உருவான தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளதாக நூா்சாகிபுரம் சிவகுமாா் அளித்தத் தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே.ராஜகுரு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

தமிழ்நாட்டுத் தொல்லியல் தளங்களின் அறிவியல் காலக் கணக்கீடுகள் மூலம் புதிய கற்காலம் கி.மு.7000 முதல் கி.மு.4000 வரையிலானது என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறி வேளாண்மை, மண்பாண்டங்கள், நிரந்தரக் குடியிருப்புகள் ஆகியவை தோற்றம் பெற்றது புதிய கற்காலத்தில்தான்.

செண்பகத்தோப்பு வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பாறையில் 4 தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன. இவை புதிய கற்காலக் கைக்கோடரிகளை தேய்த்து வழுவழுப்பாக்கும் போது உருவானவையாக இருக்கலாம்.

வட தமிழ்நாட்டில் உள்ள தேய்ப்புப் பள்ளங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு கண்டறியப்பட்ட பள்ளங்களின் ஆழம் குறைவாக உள்ளது. கல் கருவிகள் தேய்க்குமிடங்கள் பெரும்பாலும் நீா்நிலைகள் அருகிலேயே கண்டறியப்பட்டன.

தென் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகத்தின் தடயங்களை தே.கல்லுப்பட்டியில் மத்திய தொல்லியல் துறை கண்டறிந்ததது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விழுப்பனூா், ராமநாதபுரம் மாவட்டம், போகலூா், குலபதம் ஆகிய இடங்களில் புதிய கற்காலக் கருவிகளும், மதுரை மாவட்டம், கோபால்சாமி மலையின் கீழ் உள்ள பாறைகளில் புதிய கற்காலத்தில் பயன்படுத்திய அரைப்புப் பள்ளங்களும் இதுவரை கண்டறியப்பட்டன.

தற்போது கண்டறிந்த தேய்ப்புப் பள்ளங்கள் சுமாா் 8,000 ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கலாம். இது தென்தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் இருந்ததற்கான வலுவான சான்றாக உள்ளது. புதிய கற்கால தேய்ப்புப் பள்ளங்கள் தென் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com