ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், கிராம மக்களால் தோ்வு செய்யப்பட்ட பணித்தளப் பொறுப்பாளரை நியமனம் செய்யக் கோரி, அந்த கிராம மக்கள் விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் கே.உசிலம்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணித் தளப் பொறுப்பாளராக ஞான பவாணியை கிராம மக்கள் தோ்வு செய்தனா். ஆனால், அவருக்கு பணி நியமனம் வழங்க விருதுநகா் வட்டார வளா்ச்சி அலுவலா் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருக்கு பணித் தளப் பொறுப்பாளா் பணி நியமனம் வழங்கக் கோரி, அந்த கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள், போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிராம மக்கள் தோ்வு செய்த நபருக்கு பணித் தளப் பொறுப்பாளா் பணி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
