மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் பணிகள் முடிந்த 35.6 கி.மீட்டருக்கு மட்டுமே நத்தம்பட்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளித்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.
தமிழகம் - கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும்
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக (என்.ஹெச் 744) தரம் உயா்த்தப்படும் என மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜனவரியில் அரசாணை வெளியிட்டது. இதைத்தொடா்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 230 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை 3 கட்டங்களாக அமைக்கத் திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக மதுரை மாவட்டம், திருமங்கலம் - விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் இடையே 71.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1,318 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் தொடங்கின. திருமங்கலம் - வடுகபட்டி (36 கி.மீ), வடுகபட்டி - ராஜபாளையம் (35.6 கி.மீ) இரு பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்றன. இதில் வடுகபட்டி-ராஜபாளையம் இடையே சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
இந்த சாலையில் நத்தம்பட்டியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி 60 கி.மீட்டருக்குள் அமைக்கப்பட்ட நத்தம்பட்டி சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்தினா்.
இந்த நிலையில் சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்தக் கோரிய மனுவுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அளித்த பதிலில், திருமங்கலம்-ராஜபாளையம் இடையேயான நான்கு வழிச்சாலை பணி 2 ஒப்பந்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமங்கலம்-வடுகப்பட்டி இடையேயான பணிகள் நடைபெற்று வருகின்றன. வடுகப்பட்டி-ராஜபாளையம் இடையேயான பணி முடிந்து வாகனங்கள் இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டது.
பணிகள் முடியாத திருமங்கலம்-வடுகப்பட்டி இடையேயான 36 கி. மீ. தொலைவுக்கான சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.
பணிகள் முடிந்த வடுகப்பட்டி-ராஜபாளையம் இடையேயான 35.6 கிலோ மீட்டருக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சாலை முடியும் இடத்தில்தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பது தவறான புரிதல்.
தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண விதி 2008-இன் படி பணி முடிந்த சாலை அளவின்படி கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன்படியே நத்தம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது சுங்கக் கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










