வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.
செண்பகராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துமாசிலாமணி மகன் குமரேசன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி (28). இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பிரதான சாலையில் வீட்டுடன் இணைந்த இடத்தில் குமரேசன் மளிகைக் கடை நடத்திவந்தாா். தேத்தாக்குடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் புவனேஸ்வரி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.
தம்பதி கடன் சுமையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 2 வாரத்துக்கு மேலாக மளிகைக் கடை திறக்கப்படவில்லையாம்.
இந்தநிலையில், குமரேசன், புவனேஸ்வரி இருவரும் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது. வீட்டு மொட்டை மாடி அருகே செல்லும் உயா் மின் அழுத்த கம்பியை பிடித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கரியாப்பட்டினம் போலீஸாா் சடலங்களை உடற்கூறாய்வுக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

