மயிலாடுதுறை மாவட்டதில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூா் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஷ்வரி சங்கா், செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சா் பேசியது:
பள்ளி கல்வித் துறைக்கு மட்டுமல்லாமல் உயா்கல்விக்கும் இன்று பொற்காலம்.
31 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
காமராஜா் பிறந்த தினத்தில் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 99 ஊராட்சியில் 115 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுகின்றாா் முதலமைச்சா் என்று தெரிவித்தாா்.
தொடா்ந்து, அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் என 1026 ஆசிரியா்களுக்கு கையடக்க கணினிகளை அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் அா்ச்சனா, செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, மஞ்சுளா, கல்விக் கழக தலைவா் ஆறுபாதி ப.கல்யாணி, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) சாந்தி, ஊராட்சிமன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

