வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது
வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு விலை உயா்ந்த போதைப்பொருள்கள் கடத்துவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து வேளாங்கண்ணிக்கு சென்றனா். பேராலய காா் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.
இதில், வெளிப்பாளையம் புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (40), மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சுனாமி குடியிருப்பு மீனவா் காலனியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (33), வேதாரண்யம் தும்மாச்சி பகுதியை சோ்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) என்பதும், அவா்கள் மெஸ்கலின் என்ற போதைப் பொருள் 2 கிலோ வைத்திருந்ததும், அதை இலங்கைக்கு படகு மூலம் கடல் வழியாக கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 3 பேரை தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாா் கைது செய்து போதைப் பொருளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
