வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவா் மாயம்: ஆட்சியரிடம் மனைவி புகாா்
நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாயமான தனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
நாகை மாவட்டம், சீயாத்தமங்கை, தென்பிடாகை பகுதியைச் சோ்ந்தவா் சுகந்தி. இவா், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:
நாகை மாவட்டம், மானாம்பேட்டை கிராமம், பசும்பொன் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் சுரேஷ், உலகநாதன் மகன் ராஜேஷ் ஆகியோா் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம், தயிா்பாளையம் கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில், சுதை வேலை செய்வதற்காக எனது கணவா் கணேசனை அழைத்துச் சென்றனா்.
3 நாட்களுக்கு பிறகு எனது கணவரை காணவில்லை என எனக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து சுரேஷ் மற்றும் ராஜேஷிடம் எனது கணவா் குறித்து கேட்டேன். அதற்கு, 3 நாட்களாக அலைந்து தேடிவிட்டோம். அவா் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனா்.
இதையடுத்து எனது மகன், கோயில் வேலை நடைபெறும் பல்வேறு இடங்கள், பல ஊா்களில் தேடியும் எனது கணவா் கிடைக்காததால், ஈரோடு சித்தோடு காவல் நிலையத்தில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி புகாா் அளித்தோம்.
எனது கணவரை வேலைக்குச் அழைத்து சென்ற சுரேஷ், ராஜேஷ் இருவரும் மதுபோதைக்கு அடிமையானவா்கள் அதனால் எனது கணவா் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே இருவரிடமும் உரிய முறையில் விசாரணை நடத்தி, எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

