தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துகொள்வோருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் கூறினார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
காரைக்காலில் டயாலிசிஸ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், காரைக்காலில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்யும் யூனிட் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த யூனிட்டை நிர்வகிக்க போதிய தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது. இதை களைய புதுச்சேரி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மையத்தில் டயாலிசிஸ் காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இவர்கள் காரைக்காலிலோ அல்லது வெளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துகொள்கின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாஹே, யேனாம் பிராந்தியத்தின் பயனாளிகள், தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துகொள்ள நிதியுதவியை அரசு செய்கிறது.
அதேபோன்று, காரைக்காலில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் அவசரம் கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொள்ளும்போது, அதற்கான கட்டணத்தை காரைக்கால் அரசு மருத்துவமனை மூலம் தனியார் மருத்துவமனைக்கு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து காரைக்கால் ஆட்சியர், நலவழித்துறை இயக்குநரிடம் பேசியபோது, நல்ல திட்டம் என வரவேற்றுள்ளனர். இதை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.