வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணி சிறப்புப் பார்வையாளரான அரசு செயலர் டி. மணிகண்டன், காரைக்கால் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 2-ஆம் கட்ட ஆய்வு செய்ய வந்த அரசு செயலர் டி. மணிகண்டன், மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வாக்குச் சாவடியில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கூறிய கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது போன்று, நீக்கும் போதும் அவர்களுக்கு உரிய அவசாகம் தர வேண்டும். திருநள்ளாறு பகுதி சுப்ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் வசிப்போர், 2 கி.மீ., தூரம் சென்று வாக்குப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இவர்கள் பகுதியிலேயே வாக்களிக்கும் வகையில் வசதி செய்துத் தர வேண்டும்.
வாக்காளர் பட்டியல் விவரங்கள் பள்ளிகளின் உள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக்குள் சென்று பார்ப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பார்க்கும் வகையிலான இடத்தில் பட்டியலை வைக்க வேண்டும்.
திருநள்ளாறு தொகுதியில் உள்ள தமிழக எல்லைப்புறத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்குப் பதிவுக்கு மட்டும் இங்கு வருகின்றனர். பின்னர், அவர்கள் இந்த பகுதியில் இருப்பதில்லை. இவர்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, இவற்றை சரிசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற இடங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை மாற்றி பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.
தேர்தல் துறையினர் கூறும்போது, தற்போது நடைபெறும் முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக 1,853 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கு மட்டும் 1,234 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் நெடுங்காடு தொகுதி - 272, திருநள்ளாறு தொகுதி - 249, காரைக்கால் வடக்குத் தொகுதி - 216, காரைக்கால் தெற்குத் தொகுதி - 214, நிரவி- திருப்பட்டினம் தொகுதி - 283 ஆகும்.
மேலும் பெயர் திருத்தம் உள்ளிட்ட பிற திருத்தம் தொடர்பாக 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதோடு, 2018-ஜனவரி 24-ஆம் தேதி புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஆர். கேசவன், கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே. பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கே. ரேவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.