காவிரித் தண்ணீர் வரத்து தற்போது குறைந்திருக்கும் நிலையில், ஆழ்குழாய் பாசனத்தைக்கொண்டு சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கல்லணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் புதுச்சேரி யூனியன் பிரதேசம், கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு வந்து சேர வேண்டும். முந்தைய ஆண்டுகளில் முறைவைப்பு திறப்பால், காரைக்காலுக்குரிய தண்ணீர் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
கல்லணை திறக்கப்பட்டு கடந்த 14-ஆம் தேதி மாலை காரைக்கால் பகுதி நூலாற்றுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதை மாவட்டத்தின் விளை நிலப் பகுதிக்கு முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இது ஓரிரு நாள்கள் மட்டுமே வந்ததாகவும், பின்னர் வரத்து குறைந்துவிட்டதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காவிரி நீர் வந்தது என்பது உறுதியான நிலையிலும், பருவமழை தொடங்கவுள்ள நிலையிலும், ஆழ்குழாய் பாசனத்தில் பயிர் செய்யக்கூடிய தகுதியான இடங்களில், சாகுபடிப் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சில இடங்களில் ஆழ்குழாய் பாசனத்தில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இது நாற்றுப் பறிக்கும் வகையிலான பருவத்தை எட்டியுள்ளது. மேலும் வரக்கூடிய காவிரி நீர், பருவமழையை நம்பி உழவுப் பணியையும் பெரும்பான்மையான விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சேத்தூர் பகுதி விவசாயி மதன்குமார் வியாழக்கிழமை கூறியது: செல்லூர், சேத்தூர், நல்லம்பல், தென்னங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீரை எதிர்பார்க்க முடியாது. இவை மேடான பகுதிகளாகும். இந்த இடங்களில் ஆழ்குழாய் முறையிலேயே விவசாயம் செய்ய முடியும். பருவமழைக் காலம் இந்த பகுதிகளுக்கு பயன்தரும்.
இந்த இடங்கள் அல்லாத பிற பகுதிகளில் காவிரி நீர் தேவை மிகுதியானது. கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி நீர், நூலாற்றுக்கு வந்து திறக்கப்பட்டது. தமிழகத்தில் முறைவைப்பு தொடங்கிவிட்டதால், காரைக்காலுக்கு வரக்கூடிய தண்ணீரும் குறைந்துவிட்டது.
திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த முன்னணி விவசாயியான ஆர். கமலக்கண்ணன் வேளாண் அமைச்சராகவும் இருக்கிறார். எனவே, அவர் விவசாயிகளுக்கு தேவை என்ன என்பதை நன்கு அறிந்தவர். காவிரி நீரை முறையாக காரைக்காலுக்குரியதை பெற அவர் முழு முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது வடிகால்கள் வேகமாக தூர்வாரப்பட்டு வருவதால், காவிரி நீர் வந்தாலும், பருவமழையினாலும் விவசாயத்துக்கு பயன் கிடைக்கும் என நம்புகிறோம். தற்போது இந்த பகுதிகளில் ஆழ்குழாய் முறையில் பலர் விவசாயம் செய்கின்றனர். சில இடங்களில் உழவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. பருவமழையின் காலம் இந்த பகுதியினருக்கு வாய்ப்பாக இருக்கும். அதை கருத்தில்கொண்டே பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்றார்.
காரைக்கால் வேளாண் துறையினர் தரப்பில் கூறும்போது, உரிய காலம் கடந்து விவசாயம் தொடங்கியுள்ள நிலையில், காரைக்காலில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பயிர் செய்ய வாய்ப்புண்டு எனக் கருதுகிறோம். பலர் தண்ணீரை எதிர்பார்த்து புழுதியடித்து நிலத்தை வைத்துள்ளனர். சிலர் ஆழ்குழாய் மூலம் வேளாண் பணி செய்து வருகின்றனர். காவிரி நீரும் வந்து பெரும்பான்மையினர் பணி மேற்கொள்ளும்போதுதான், எவ்வளவு அளவில் விவசாயம் நடக்கிறது என்பதை உறுதியாக கூற முடியும் என்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழகத்தில் கபிஸ்தலம் பகுதியில் தற்போது காவிரி நீர் திறக்கப்பட்டதால் பூம்புகார் வரையிலான கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. அடுத்த சில நாள்களில் அரசலாற்றில் தண்ணீர் திறப்பு செய்ய வாய்ப்புண்டு. இதன்மூலம் காரைக்கால் பகுதிக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேரும். தமிழக அதிகாரிகளுடன் பொதுப்பணித்துறையினர் தொடர்பில் இருந்து வருகின்றனர் என்றார் அவர்.
விவசாயிகள் கூட்டம் நடத்த வலியுறுத்தல்: தற்போது காவிரி நீர்வரத்து, பருவமழைக்கால காலமாகும். விவசாயிகள் பலர் வேளாண் பணியை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணம், காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. புதிதாக கூட்டுறவு வங்கியில் கடன் பெறமுடியவில்லை. பாசிக் நிறுவனத்தினர் போராட்டம் நடத்தி வருவதால், இடுபொருள்கள் வாங்க முடியவில்லை. இந்நிலையில் வேளாண் அமைச்சர், வேளாண் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காரைக்காலில் நடத்த வேண்டும் என்பது பெரும்பான்மையான விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.