டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: நலவழித்துறையினர் தகவல்

டெங்கு கொசுவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தருவது தொடர்பாக நலவழித்துறையினர் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
Updated on
1 min read

டெங்கு கொசுவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தருவது தொடர்பாக நலவழித்துறையினர் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
காரைக்காலில் 2-ஆவது கட்ட டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி தலைமையில் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் அவரவர் பகுதிக்குள்பட்ட குடியிருப்பு வட்டாரத்தில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 160 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டு காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. நிகழ்மாதம் இதுவரை 40 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரியவந்து சிகிச்சை பெற்றுள்ளதாக நலவழித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் தீவிரமான டெங்கு விழிப்புணர்வால் இவ்வாறு எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், பொதுமக்கள் மேலும் சுகாதாரமாக சுற்றுவட்டாரத்தையும், குடியிருப்பு வளாகத்தையும் வைத்திருந்தால் டெங்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்து விட முடியும் என்கின்றனர் நலவழித்துறை அதிகாரிகள்.
நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி தலைமையில் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும், சுகாதார ஆய்வாளர்கள் பி. ஆண்ட்ரூஸ்,  ஜி. சிவவடிவேல் உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழுவும், களப்பணியாளர்கள் கொண்ட பல்வேறு குழுக்களாக காரைக்கால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக களப்பணியாளர்கள் குழு கொசுப் புழுக்களை கண்டறிந்து அழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
கொசுப் புழுக்கள் எவ்வாறு உருவாகிறது, மக்கள் எந்தெந்த வகையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொசுப் புழுக்களை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
களப் பணியாளர்கள் குழு தனித்தனியாக பிரிக்கப்பட்டு, காரைக்கால் பகுதி கொம்யூன் வாரியாக வீடு வீடாகச் சென்று கொசுப் புழு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வாக, நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.
காய்ச்சலில் உள்ளோரை கண்டறிந்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் காரைக்காலில் டெங்கு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com