காரைக்கால் பகுதியில் பரவலாக சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், மத்திய உணவுக்கழகம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 4,500 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்றது. காவிரி நீர் கிடைக்காததால் ஆழ்குழாய் பாசனம், குட்டைப் பாசனம், நேரடி நெல் விதைப்பு, பருவ மழையை நம்பி விதைப்பு என மாறுபட்ட சூழல்களில் நெல் பயிரிடப்பட்டது. இதனால் தை மாதம் தொடக்கத்தில் அல்லது மத்தியில் நடைபெற வேண்டிய அறுவடைப் பணி காலம் நிகழாண்டு மாறிவிட்டது.
மாவட்டத்தில் புத்தக்குடி, செல்லூர், அம்பரகத்தூர், கோட்டுச்சேரி கீழவெளி பகுதியில் கடந்த சில நாள்களாக அறுவடை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் முனைப்பாக திறக்கவில்லை. மார்க்கெட்டிங் சொசைட்டி மூலம் கொம்யூன்களில் திறக்கப்பட்டாலும், ஒரு சில வகை ரக நெல் மட்டுமே வாங்கப்படுகிறது. இதனால் தனியாரிடம் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.
காரைக்கால் பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு வறட்சியால் விவசாயம் பாதித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பருவமழை, ஆழ்குழாய் பாசனம், குட்டைப் பாசனம் என பல்வேறு நீராதாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் பரவலாக சம்பா சாகுபடி செய்துள்ளனர். காரைக்காலில் ஒரு சில விளைநிலப் பகுதியை தவிர்த்து, பிற இடங்களில் விவசாயம் செழிப்பாக உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 4,500 கிலோ மகசூல் கிடைக்க நிகழாண்டு வாய்ப்பிருக்கிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, கொள்முதல் செய்யவேண்டும் என வேளாண் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் கூட்டுறவு சங்கமான மார்க்கெட்டிங் சொசைட்டி மேலாளர் அசோக்குமார் கூறியது: காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து கொம்யூன்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்துள்ளோம். நிலையத்துக்கு கொண்டு வந்து விவசாயிகள் நெல் கொடுக்க வேண்டும். தற்போது ஏடிடி 38, 46 வகையை கொள்முதல் செய்யவில்லை. பிற வகைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
இதுகுறித்து திருநள்ளாறு பகுதி விவசாயி ராமகிருஷ்ணன் கூறியது: தனியார் கொள்முதலாளர்கள் நேரடியாக விளை நிலப் பகுதிக்கே சென்று நெல் வாங்குகிறார்கள். இதனால் நெல் மூட்டைகள் ஏற்றுமதி செலவு குறைகிறது. இதேபோல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதுச்சேரி அரசு உடனடியாக ஏற்படுத்துவதோடு, ஊக்கத்தொகையுடன் அரசு நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும். அடுத்த 15 நாள்களில் பெரும்பாலான இடங்களில் அறுவடை நடைபெறவுள்ளதால், காரைக்காலில் உள்ள மத்திய உணவுக்கழகமும் கொள்முதல் செய்ய மத்திய அரசுடன் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.