சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணி

காரைக்காலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணி திட்டம், கோட்டுச்சேரி பகுதியில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:40 pm

DIN

காரைக்காலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணி திட்டம், கோட்டுச்சேரி பகுதியில் தற்போது தார் ஜல்லிகள் கொட்டப்பட்டு மேம்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. பெருமளவு சேதமடைந்த அம்மாள்சத்திரம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரையிலான பகுதியை விரைவாக மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டமாக வாஞ்சூர் முதல் போலகம் வரை சுமார் 3 கி.மீ. தூரம்  இந்த பணி ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டது.
தற்போது ரூ.10 கோடி மதிப்பில் வடக்கே  பூவம் பகுதியிலிருந்து தெற்கே திருமலைராஜனாறு பாலம் வரை சாலை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிதி மத்திய நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கித்தந்துள்ளது. திட்டப்பணியை மாநில அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது.
தற்போதுள்ள 7 மீட்டர் அகலமுடைய தேசிய நெடுஞ்சாலையை இருபுறமும் தலா 1.5 மீட்டர் வீதம் அகலப்படுத்தி 10 மீட்டர் சாலையாக மேம்படுத்தப்படுகிறது. அகலப்படுத்த ஏதுவாக, சில இடங்களில் உள்ள மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படவேண்டும்.
 மின் கம்பங்கள் இடமாற்றப் பணி திருமலைராஜனாறு பாலம் முதல் எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழைய மின் கம்பத்துக்கு அருகே 3 அடி அகலத்தில் புதிய கம்பம் நடப்படுகிறது.  இந்த பகுதியில் மின் கம்பங்கள் முழுமையாக இடமாற்றம் செய்யப்படாமல், பணிகள் மந்தகதியில் நடந்துவருகிறது. இதனால் இந்த பகுதியில் சாலை மேம்படுத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காரைக்காலின் வடக்குப் புறமான பூவம் முதல் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை பொதுப்பணித்துறை நிர்வாகம் தற்போது மேற்கொண்டுள்ளது.
பூவம் முதல் கோட்டுச்சேரி பகுதி வரை சாலையில் தார் ஜல்லிகள் கொட்டி சமன் செய்யும் பணிகள் நடந்துவருகிறது. பொதுவாக சாலை அகலப்படுத்தி, புதுப்பிக்கும் பணிகள் மந்தகதியில் நடந்துவருவதாகவே பல்வேறு தரப்பினர் புகார் கூறுகின்றனர்.
பணிகள் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம், சாலைகள்) ஏ.ராஜசேகரன் திங்கள்கிழமை கூறும்போது, பூவம் பகுதியிலிருந்து சாலை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. அம்மாள் சத்திரம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரையிலான பகுதியில் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட சில பணிகள் நடைபெறவேண்டியுள்ளதால், இந்த பணிகள் முடிந்தவுடன் அவ்விடத்தில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றார்.
புதுச்சேரியிலிருந்து ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் என முக்கிய பிரமுகர்கள் காரைக்கால் வருகிறார்கள் என்றால் காரைக்காலின் வடக்கு எல்லையான பூவம் பகுதியிலிருந்து நகருக்கு வருகிறார்கள். இதற்காகவே பூவம் பகுதி முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.  காரைக்காலில் அம்மாள் சத்திரம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ளதையொட்டி, இந்த வட்டாரத்தில் மின் கம்பங்கள் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பிற பணிகளை போர்க்கால முறையில் முடித்து, சாலை மேம்படுத்தவேண்டும். குறிப்பாக சாலைகள் போட்ட சில மாதங்களிலேயே ஆங்காங்கே சிதிலமடைந்துவிடுகின்றன. ரூ.10 கோடி திட்டம் என்பதால், பணிகள் உரிய விதியின்படி செய்யப்படுகிறதா என்பதை உரிய வல்லுநர் குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்யவேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் துறை வல்லுநர்களும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.