மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவாரூர், நாகை மாவட்டத்தினரும் பயன்பெறும் வகையில் பயன்பாட்டுக்கு வந்தது காரைக்கால் பாஸ்போர்ட் அலுவலகம்

காரைக்கால் மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் செயல்பாட்டை தொடங்கிய காரைக்கால் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம்,

News image
Updated On :1 மார்ச் 2018, 9:23 pm

DIN

காரைக்கால் மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் செயல்பாட்டை தொடங்கிய காரைக்கால் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம், திருவாரூர், நாகை மாவட்டத்தினரும் பயன்பெறும் வகையில் மார்ச் 1 முதல் செயல்பாடுகளைத் தொடங்கியது.
காரைக்காலில் கடந்த ஜன.19-ஆம் தேதி தபால் நிலைய கடவுச் சீட்டு சேவை மையத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து
வைத்தார்.
காரைக்காலை சேர்ந்தோர் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றுவந்தனர். பின்னர் புதுச்சேரியில் தொடங்கப்பட்ட சேவை மையத்தில் பரிசீலனைகளை செய்துகொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.
மத்திய அரசு, நாட்டில் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் திறக்க எடுத்திருக்கும் நடவடிக்கையின் பயனாக, காரைக்கால் தபால் நிலையத்தில் சேவை மையம் திறக்கப்பட்டது. அலுவலக தொடக்க நிகழ்ச்சியிலேயே காரைக்கால் மட்டுமல்லாது நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தினரும் இங்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் வசதி உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
ஆனால் தொடக்க நாள் முதல் காரைக்கால் மாவட்டத்தினர் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் இது இயங்கத் தொடங்கியது. அறிவிக்கப்பட்டவாறு பிற மாவட்டத்தினரும் பயனடையும் வகையில் காரைக்கால் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பாடுகளை அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில் காரைக்கால் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வருவதாகவும், மார்ச் 1 முதல் திருவாரூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தோரும் காரைக்கால் பாஸ்போர்ட் அலுவலகத்தை நாடலாம் என திருச்சி மண்டல பாஸ்போர்ட்  அலுவலர் எஸ்.லிங்கசாமி கடந்த  பிப்.23-ஆம் தேதியிட்ட அறிவிப்பின்படி கூறியிருந்தார்.
இதன்படி காரைக்கால் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் மார்ச் 1 வியாழக்கிழமை முதல் திருவாரூர், நாகை மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் செயல்படத் தொடங்கியது.
இந்த அலுவலகத்தில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பெயர், தொடர்பு விவரங்கள் குறித்து தகவல் பலகையில் வைத்திருந்த தகவல்கள் மறைக்கப்பட்டு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பெயர், தொடர்பு விவரங்கள் கொண்ட தகவல் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் நிர்வாக அலுவலர்கள் மாறி, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள் பணிக்கு வந்தனர்.
முதல் நாளிலேயே திருவாரூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தோர் பலர், காரைக்கால் அலுவலகத்திற்கு வந்து விவரங்களைக் கேட்டறிந்து சென்றனர்.
காரைக்கால் மாவட்டத்தினர் மட்டும் இந்த அலுவலகத்திற்கு செல்லும்போதே இடநெருக்கடி காணப்பட்டது. மேலும் 2 மாவட்டத்தினர் வருகை ஏற்பட்டால், அலுவலக வாயிலில் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே காரைக்கால் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு தகுதியான இடத்தை அமைத்துத்தர புதுச்சேரி அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.