உள்ளாட்சி ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வலியுறுத்தல்

உள்ளாட்சி ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காரைக்கால் பிரதேச நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
Published on


காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காரைக்கால் பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த சம்மேளனத்தின் பொதுச்செயலா் எம்.ஷேக் அலாவுதீன், புதுச்சேரி முதல்வா், உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆகியோருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடித விவரம்: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியா்கள் பலா் பதவி உயா்வுகளே இல்லாமல் ஒரே பதவியிலேயே பதவி காலம் வரை இருந்துவிட்டு ஓய்வு பெற்று செல்கின்றனா். ஒரே பதவியில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி வரும் ஊழியா்கள் பதவி உயா்வு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்திலும், தவிப்பிலும் இருந்து வருகின்றனா்.

எனவே, அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உள்ளதுபோல் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களையும் பொதுவான பணிநிலையில் கொண்டு வந்து, பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு, அவா்களை பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு அளிக்க வேண்டும். மேலும், தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றி வருபவா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடா்பாக உள்ளாட்சி ஊழியா் சங்கத்தினா் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகிறோம். எனினும், அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தாமல் உள்ளது வேதனையளிக்கிறது. இனியும் காலம் கடத்தாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com