காரைக்காலில் 74 நாள்களுக்குப் பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

காரைக்கால் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் 74 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. 
காரைக்காலில் 74 நாள்களுக்குப் பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

காரைக்கால் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் 74 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. 

முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன. பலகட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், 8-ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு செய்தது.

புதுச்சேரி மாநில அரசும்அமைச்சரவையில் முடிவெடுத்து  மாநிலத்தில் அனைத்து கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் அதே நாளில் திறக்கப்படும் என அறிவித்து, வழிகாட்டல்களை வெளியிட்டது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்த பக்தர்கள் காரைக்கால் மாவட்டத்தில் கோயில்கள் காலை 6 மணி முதல் வெவ்வேறு நேரங்களில் திறப்பு செய்யப்பட்டதும், கோயிலுக்குச் சென்று வழிபாடத் தொடங்கினர்.

முன்னதாக கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. கோயில்களின் வாயிலில் கை, கால்களை கழுவ தண்ணீர் குழாய் வசதி, கிருமி நாசினி சாதனம் அமைப்பை பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு, கோயில்களின் வாயிலில் வைக்கப்பட்ட பதிவேட்டில் பெயர், செல்லிடப்பேசி விவரங்களை எழுதிவைத்துவிட்டு தரிசனத்துக்குச் சென்றனர்.

மாவட்டத்தில் பிரசித்திப்  பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேடுவரர் கோயில் 6 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. அப்போதிருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரபகவான் சன்னிதிகள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் வரிசையாக செல்ல கோடுகளும், சமூக இடைவெளிக்கு வெளியே வட்டங்களும் போடப்பட்டிருந்ததை பயன்படுத்தி தரிசனம் செய்துச் சென்றனர்.

கோயில்களில் அர்ச்சனை, விபூதி, குங்குமும், தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதம் எதுவும் வழங்கப்படவில்லை. அனைத்து கோயில்களிலும் வாயிலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டு, மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு இருந்தது.

காரைக்கால் நகரப் பகுதியில் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் மாங்கனித் திருவிழா நடைபெறக்கூடிய ஸ்ரீ கைலாசநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்துச் சென்றனர்.

காரைக்கால் மஸ்தான் பள்ளிவாசலில் ஏராளமனோர் காலையிலேயே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தூய தேற்றரவு அன்னை தேவாலயத்திலும் திருப்பலியில் மக்கள் பங்கேற்றனர்.

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 74 நாள்களுக்குப் பின் வழிபாட்டுத் தலங்கள் திறந்து தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com