காரைக்கால் பாமக செயலர் வெட்டிக் கொலை: ஆதரவாளர்கள் மறியல் போராட்டம்

காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க. தேவமணி வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி ஆதரவாளர்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் பாமக செயலர் வெட்டிக் கொலை: ஆதரவாளர்கள் மறியல் போராட்டம்
காரைக்கால் பாமக செயலர் வெட்டிக் கொலை: ஆதரவாளர்கள் மறியல் போராட்டம்


காரைக்கால் :  காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க. தேவமணி வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி ஆதரவாளர்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் க. தேவமணி (51). இவர் நீண்ட காலமாக பாமக மாவட்ட செயலாளராக இருந்துவந்தார். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார்.

இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2010-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். நிலம் தொடர்பான பிரச்னைகளை பல்வேறு தரப்பினருக்கிடையே இவர் சந்தித்து வருகிறார். இதுதொடர்பாக சிலருக்கும் இவருக்கும் முன் விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், திருநள்ளாறு கடைத்தெரு பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இருந்துவிட்டு இரவு 10.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தபடி வீட்டுக்குக் சென்றுள்ளார். அப்போது கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கும் புதிதாக கட்டப்படும் பள்ளிக் கட்டடத்துக்குமிடையேயான பிரதான  சாலைப் பகுதியில் 3 பைக்கில் வந்த 6 பேர் இவரை இடைமறித்து, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். நிகழ்விடத்திலேயே தேவமணி உயிரிழந்தார்.

கடையொன்றில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானவற்றைக்கொண்டு இது உறுதி செய்யப்பட்டது. இரவில் நடந்த நிகழ்வு என்பதால் கொலையில் ஈடுபட்டவர்கள் முகம் தெளிவாக தெரியவில்லை.  திருநள்ளாறு காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

இதற்கிடையே அவரது உடல் காரைக்கால் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. பாமக மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் கொட்டும் மழையில் திரண்டு மருத்துவமனை அருகே சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும், அப்போதுதான் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர். பின்னர் அவரது உடல் பகல் 12.40 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com