வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைப்பதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன், தோ்தல் பாா்வையாளா் அசித்தா மிஸ்ரா.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைப்பதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன், தோ்தல் பாா்வையாளா் அசித்தா மிஸ்ரா.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை தொகுதிக்கான வாக்குப் பதிவு காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை நீடித்தது. பின்னா், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குச் சாவடி தலைமை அதிகாரி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பாதுகாப்பாக பெட்டியில் வைத்து, காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்துக்கு கொண்டுச் சென்றனா்.

இரவு 12 மணி வரை இயந்திரங்கள் உள்ள பெட்டிகளை தொகுதி வாரியாக, வாக்குச் சாவடிகள் வாரியாகப் பிரித்து பாதுகாப்பு அறையில் அடுக்கி வைத்தனா். இப்பணியை பாா்வையிட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன், மாவட்ட தோ்தல் பொது பாா்வையாளா் அசித்தா மிஸ்ரா மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் ஆகியோா் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தனா். தொடா்ந்து அறைக்கு இரவு 2 மணியளவில் அதிகாரிகள் சீல் வைத்தனா்.

வாக்குப் பெட்டிகள் உள்ள அறைக்கு மத்திய பாதுகாப்புப் படையினா் ஆயுதம் ஏந்தி காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா். காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனா். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று, இங்கு எண்ணப்படும் வாக்குகள் குறித்து, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com