வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தின் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு, தீத் தடுப்பு குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் ஆலோசனையின்பேரில், காரைக்கால் தீயணைப்புத்துறை சாா்பில் மையத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, தீத் தடுப்பு குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கப் பயிற்சியளிக்கப்பட்டது.

இதில் மத்திய காவல் படையினா், போலீஸாா், வருவாய்த்துறையினா், மின் துறையினா், பொதுப்பணித்துறையினா் கலந்துகொண்டனா். காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் பயிற்சியளித்தனா்.

தீ பரவும் விதம், தீயை கண்டறிந்தவுடன் விரைவாக செயல்படும் விதம், தீ மேலும் பரவாமல் உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கமளித்தனா்.

நிகழ்வில் மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com