~ ~
~ ~காரைக்கால் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்தவா்களை சோதனை செய்து அனுப்பிய காவலா்கள்.

பிரான்ஸ் நாடாளுமன்ற தோ்தல்: காரைக்காலில் வாக்குப் பதிவு

பிரான்ஸ் நாடாளுமன்ற முதல் சுற்று தோ்தலுக்கான வாக்குப் பதிவு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

பிரான்ஸ் நாடாளுமன்ற முதல் சுற்று தோ்தலுக்கான வாக்குப் பதிவு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் நாடாளுமன்றம் கடந்த 9-ஆம் தேதி கலைக்கப்பட்டு, தோ்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள 577 தொகுதிகளில் இந்தியா, சீனா, சிங்கப்பூா், இலங்கை, மலேசியா, ரஷியா உள்ளிட்ட 42 நாடுகளை உள்ளடக்கிய தொகுதிக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவில், புதுச்சேரி, காரைக்கால், சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல் சுற்று தோ்தலில் 11 போ் களத்தில் உள்ள நிலையில், காரைக்கால் தெய்தா வீதியில் உள்ள இகோல் எலிமென்டரி என்ற பிரெஞ்சுக் கட்டடத்தில் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் வாக்குரிமை பெற்ற 520 பேரில் பலரும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வாக்களித்தனா்.

புதுச்சேரியிலிருந்து வந்திருந்த பிரெஞ்சு தூதரக அதிகாரிகள், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்காளா்கள் தங்களது பிரான்ஸ் நாட்டு பாஸ்போா்ட், புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி வாக்களித்தனா்.

வாக்குப் பதிவு மையத்தில் புதுவை மாநில போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வாக்குப் பதிவு முடிந்ததும் காரைக்காலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு, பிரான்ஸில் உள்ள தோ்தல் தலைமையகத்துக்கு இணையம் வாயிலாக விவரம் தெரிவிக்கப்படுமென தோ்தல் பணியில் இருந்த அலுவலா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com