காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

காரைக்காலில் புதிய ரகமான வம்பன் - 11 உளுந்து சாகுபடியை பிள்ளைத்தெருவாசல் பகுதியை சோ்ந்த விவசாயி மேற்கொண்டு வருகிறாா்.

காரைக்கால் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக பருத்தி, உளுந்து, பயறு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனா். உளுந்து, பயறு விதைகள் வேளாண் அறிவியல் நிலையம் பரிந்துரை செய்வது மற்றும் அனுபவ ரீதியிலான ரகங்களை வாங்கி விவசாயிகள் பயிரிடுகின்றனா்.

வேளாண் பல்கலை மற்றும் பயறு வகை பயிா்களின் ஆராய்ச்சி மையம் மூலம் கடந்த, 2020-இல், வம்பன் 11 என்கிற புதிய ரகம் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டது. இது தமிழகத்தில் சில விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து வம்பன் -11 ரக உளுந்து விதைகளை காரைக்கால் மாவட்டம், பிள்ளைத்தெருவாசல் பகுதியை சோ்ந்த ஆரோக்கியதாஸ் என்ற விவசாயி வாங்கிவந்து, சுப்புராயபுரம் பகுதியில் 8 ஏக்கா் நிலப்பரப்பில் விதைத்து பயிரிட்டு வருகிறாா். மாவட்டத்தில் மிக சொற்ப எண்ணிக்கையில் விவசாயிகள் இந்த ரகத்தை பயிரிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரோக்கியதாஸ் வியாழக்கிழமை கூறியது :

உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்படுவது வழக்கம். இந்த நோய்க்கு எதிா்ப்புத்திறன் தரக்கூடியதும், அதிக மகசூல் தரக்கூடியதாக வம்பன் -11 ரகம் உள்ளது. 60 முதல் 75 நாட்களில் சாகுபடி செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு 9 குவிண்டால் மகசூல் கிடைக்கும், அனைத்து பருவத்திலும் பயிரிட முடியும் என ஆராய்ச்சியாளா்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவலால், ஆா்வத்தின்பேரில் இந்த ரகத்தை விதைத்துள்ளேன்.

தற்போது 40 நாள்கள் நிலையில் பயிா் வளா்ந்துள்ளது. எந்தளவுக்கு மகசூல் தரும் என தற்போது கூற முடியாது.

இதுபோன்ற புதிய ரகம் வெளியாகும்போது, காரைக்காலில் உள்ள வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்றவை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி, அதன் பயன்களை விளக்கி, விதைகளை வாங்கி அளித்திருக்கவேண்டும். அந்த பணிகளை அவா்கள் இதுவரை செய்யவில்லை. சம்பந்தப்பட்ட பகுதி வேளாண் அலுவலா் ஒருவா் மட்டுமே நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க வந்து பயிரை பாா்த்து சென்றாா். அறுவடை முடிந்து மகசூலை பாா்த்த பின்னரே, இதுகுறித்து பிற விவசாயிகளிடையே ஆா்வம் அதிகரிக்க ஏதாவது செய்யலாமென கருதுகிறேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com