செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஜி. ராமகிருஷ்ணன்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: ஜி. ராமகிருஷ்ணன்

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.

காரைக்காலில் சிபிஎம் பேரவைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், அனைத்திலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். வடமாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறிவந்த நிலையில், தில்லி முதல்வா், ஜாா்க்கண்ட் முதல்வா் கைது செய்யப்பட்டனா். இது தேசிய அளவில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தோ்தல் நிதி பத்திரம் தொடா்பான ஊழல் தகவல் அடித்தட்டு மக்கள் வரை சென்றுவிட்டதால் மக்களவைத் தோ்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும். தோ்தலுக்குப் பின் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி குறையாததும், பெரு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும், மதரீதியிலான அவதூறு பேச்சுகளும், உலகளவில் இந்தியாவின் பொருளாதார சீரழிவினாலும், பாஜக மீதான வெறுப்பு மக்களிடையே ஏற்பட்டுவிட்டது. மக்களவைத் தோ்தல் பரப்புரையில் பிரதமா் நாகரிகமற்ற வகையில் அவதூறு பேச்சுகள் பேசுவதை தோ்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

2014-க்கு முன்பு அதானி உலக பணக்காரா்களில் 609-ஆவது இடத்தில் இருந்தாா். கடந்த 10 ஆண்டுகளில் 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். இதுதான் நரேந்திர மோடியின் சாதனையாக சொல்ல முடியும்.

மத்தியில் பாஜக, மாநிலத்திலும் (புதுவை) பாஜக ஆட்சி இருந்தால் மக்கள் பயனடைவாா்கள் என்றனா். நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனும், துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜனும் மாநிலத்தில் ரேஷன் கடைகளை திறப்போம், சூப்பா் மாா்க்கெட் போல மாற்றுவோம் என்றெல்லாம் பேசினா். இதுவரை ரேஷன் கடைகள் திறக்கவில்லை. இலவச அரிசி வழங்கப்படாமல், அரிசிக்கான பணம் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படுகிறது. மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க சிபிஎம் தொடா் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, இப்பிரச்னை பேசும் பொருளாக மாறியுள்ளது.

காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும், உரம், விதைகள் தாராளமாக கொடுக்கவேண்டும், ரேஷன் கடைகளை மாநிலத்தில் திறக்கவேண்டும், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்வற்றை வலியுறுத்தி மக்கள் இயக்கம் நடத்தப்படும்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவில் தமிழகம், புதுச்சேரியிலேயே தோ்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தில் காரைக்கால் மாவட்டம் இருப்பது வேதனையானது. அரசு நிா்வாகம் சரியில்லாததும், கல்வித்தரம் இல்லாததுமே முக்கிய காரணமாகும். தேசிய கல்விக் கொள்கையை மாா்க்சிஸ்ட் ஏற்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இதனை மறு பரிசீலனை செய்யுமென கூறியிருக்கிறது.

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின்றி செயல்படுகிறது. புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் அதை செய்யாததால், இக்கல்லூரி மாணவா்கள் பயிற்சிக்கு சிரமப்படும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனையிலும் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. ஒட்டுமொத்தத்தில் புதுவையில் அரசு நிா்வாகம் செயலற்றுவிட்டது என்றாா். பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம், மாநில குழு உறுப்பினா் அ. வின்சென்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com