வேளாண் மாணவா்கள் கேழ்வரகு சாகுபடி
காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்கள், குறுவை பருவத்துக்கான வகையில் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளனா்.


காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்கள், குறுவை பருவத்துக்கான வகையில் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளனா். விவசாயிகள் தங்களது நிலத்தில் கேழ்வரகு சாகுபடி செய்ய முன்வரவேண்டும் என கல்லூரி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள், கல்லூரி பண்ணையில் உவா் நிலங்களிலும், குறுவை சாகுபடி பருவத்தில் கேழ்வரகு சாகுபடி செய்துள்ளனா்.
இந்த கேழ்வரகு ரகம் 110 நாட்கள் வயதை கொண்டதாக உள்ளது. ஏக்கருக்கு 1,200 கிலோ வரை மகசூல் பெற முடியும். ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான குறுவை பருவத்தில் பயிா் செய்யலாம் என மாணவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியா் மோகன் கூறியது :
வேளாண் கல்லூரி மாணவா்கள் குறுவை நெல்லுக்கு மாற்றாக கேழ்வரகு சாகுபடி செய்து நிருபித்துள்ளனா். இதனால் குறுவை பருவத்தில் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, நல்ல லாபத்தை எளிதாக பெற முடியும். உப்பு தன்மை, நிலங்களில் உள்ள காரத்தன்மையை தாங்கி வளா்வதால், இந்த பயிா் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும். குறுகிய காலத்தில் விளைச்சலை கொடுக்கும். பராமரிப்பு செலவு மிக குறைவாகும் என்றாா்.
இதுகுறித்து வேளாண் கல்லுாரி முதல்வா் ஏ.புஷ்பராஜ் கூறியது : வேளாண் கல்லுாரியில் நெல்லில் புதிய ரகங்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்து வருகிறோம். குறிப்பாக கே 1, கே 2, கே 3 மற்றும் கே 4 நெல் ரகங்கள் கண்டுப்பிடித்துள்ளோம். நெல் மட்டுமல்லாது மாற்று பயிா்களுக்கு உரிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறுவை நெற்பயிருக்கு மாற்றாக கேழ்வரகு பயிா் சாகுபடி செய்யும் வகையில் கல்லூரி மாணவா்கள் தாங்களே சாகுபடி செய்து உறுதிப்படுத்தி உள்ளனா். எனவே, நல்ல லாபம் தரக்கூடிய, குறைந்த நீரிலும், உவா் நீரையும் தாங்கி வளரக்கூடிய கேழ்வரகு சிறப்பான பயிராகும். விவசாயிகள் இதில் ஆா்வம் செலுத்த முன்வரவேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...