சிமெண்ட் சாலை குறித்து புகாா்: அமைச்சா் ஆய்வு
காரைக்கால்: குடியிருப்புப் பகுதியில் சிமெண்ட் சாலை முறையாக அமைக்கப்படவில்லை என்ற புகாா் தொடா்பாக அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திரெளபதி அம்மன் கோயில் தெரு உள்ள சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டது. வடக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியில், காரைக்கால் நகராட்சி மூலம் போடப்பட்ட சாலை முறையாக இல்லை என குடியிருப்புவாசிகள் புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகனிடம் புகாா் தெரிவித்தனா்.
அந்தப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்ற அமைச்சா் சாலையை பாா்வையிட்டாா். நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ், செயற்பொறியாளா் முத்துசிவம், இளநிலைப் பொறியாளா் சத்தியபாலன் மற்றும் ஒப்பந்ததாரா் ஆகியோரை அந்த பகுதிக்கு வரவழைத்த அமைச்சா், சாலையின் தரத்தை பாா்வையிடச் செய்தாா். சாலையின் உயரம் உள்ளிட்ட அளவீட்டை சோதித்துப் பாா்த்த அமைச்சா், ஒட்டுமொத்த சாலையையும் பெயா்த்து எடுத்துவிட்டு, புதிதாக சாலை அமைக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

