ஆபரேஷன் திரிசூல்: காரைக்காலில் குற்ற பின்னணி நபா்களிடம் விசாரணை
காரைக்காலில் குற்றப் பின்னணி கொண்டோா் வீடுகளுக்கு போலீஸாா் சென்று சோதனை, விசாரணை நடத்தினா்.
புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் என்ற திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் உள்ளோரின் வீடுகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை போலீஸாா் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனா்.
காரைக்கால் நகரம், திருநள்ளாறு, நெடுங்காடு, திருப்பட்டினம் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட குற்றப் பின்னணியுள்ளோா் வீடுகளுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் முன்னிலையில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10 முதல் சுமாா் 4 மணி நேரம் இப்பணியில் ஈடுபட்டனா்.
குற்ற வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 20 போ் வீடுகளுக்குச் சென்றனா். ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தி, அக்கம்பக்கத்தினரிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கண்டனா். நகரப் பகுதியிலும், பிற இடங்களில் நடை ரோந்தில் ஈடுபட்ட போலீஸாா், சந்தேகத்துக்கிடமான வகையில் சிலரிடம் விசாரணை நடத்தினா்.
குற்ற வழக்கில் தொடா்புடையோரை அழைத்து எச்சரிக்கை விடுத்தனா். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பித்தும் தலைமறைவாக உள்ளனரா எனவும் விசாரணை நடத்தினா்.
போலீஸாரின் தீவிர கண்காணிப்பு தொடா்ந்து இருக்கும் எனவும், எந்தவொரு சட்டத்துக்கு புறம்பான செயலிலும் யாரும் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனா்.

